அஜித் முதல் அஷ்வின் வரை... பத்ம விருது அள்ளிய தமிழர்கள் | padma awards | padma bhushan Ajith Kumar
கலை, இலக்கியம், சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை இப்போது அறிவித்துள்ளது. 7 பேருக்கு பத்ம பூஷன், 19 பேருக்கு பத்ம விபூஷன், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து நடிகர் அஜித் குமார், ஷோபனா சந்திரகுமார், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு கலை பிரிவில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம ஸ்ரீ விருது பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் இடம் பெற்றுள்ளனர். தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் சுழல் ஜாம்பவானுமாகிய அஷ்வின் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார். இவர்கள் தவிர, சமையல் கலைஞர் செப் தாமோதரன், குருவாயூர் துரை, சீனி விஸ்வநாதன், ஆர்ஜி சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, வேலு ஆசான், புரிசை கண்ணப்ப சம்பந்தன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம ஸ்ரீ விருது பெறும் தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூன்றாவது மகன். கல்வி, இலக்கியம், பத்திரிகை துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கல்வி நிலையங்களை தொடங்கி கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்க உதவியவர் லட்சுமிபதி. பிடிஐ செய்தி நிறுவனம், இந்திய நாளிதழ் சங்கம், இந்திய மொழி நாளிதழ் கூட்டமைப்பு, நாளிதழ் விற்பனை தணிக்கை அமைப்பு ஆகியவற்றின் தலைவர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினராகவும் இருந்தார். சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை நிறுவி, எஸ்.எல்.சி.எஸ். அறிவியல் கல்லூரி, கே.ஆர்.எஸ். பள்ளி, ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லூரி ஆகியவற்றை துவக்கினார்.