உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு தள்ளிய ராணுவம்: பரபரப்பு தகவல் Pahalgam attack mastermind shot de

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு தள்ளிய ராணுவம்: பரபரப்பு தகவல் Pahalgam attack mastermind shot de

ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா ஸ்தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் இறந்தனர். தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாதுகாப்புப்படையினர் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள டாச்சிகம் Dachigam உயிரியல் பூங்கா அருகில் உள்ள Lidwas லிட்வாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக 2 வாரங்களுக்கு முன் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் ரகசியமாக தகவல்களை சேகரிக்க துவங்கினர். மாறுவேடத்தில் சம்பவ இடத்துக்கு சென்றும் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்களை அறிந்தனர். சில பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் மாதக்கணக்கில் பதுங்கியிருப்பது உறுதியானது. பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தை இன்று காலை ராணுவ வீரர்களும் காஷ்மீர் போலீசின் சிறப்புப்படை வீரர்களும் சுற்றி வளைத்தனர். இனி, தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு வீரர்களும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையில் நீண்ட நேரத்துக்கு சண்டை நீடித்தது. இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்த வேட்டையை நடத்தி முடித்துள்ளதாக ராணுவம் கூறியது. ஸ்ரீநகரில் உள்ள மகாதேவ் சிகரத்துக்கு செல்லும் அடிவாரப் பகுதியில் இந்த வேட்டை நடந்துள்ளது. அதனால் ஆபரேஷன் மகாதேவ் என பெயர் சூட்டியுள்ளனர். கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் பஹல்காம் தாக்குதலை நடத்திய சுலேய்மான் ஷா என்ற மூசா ஃபாஜி என தெரிய வந்தது. Suleiman Shah, alias Musa Fauji லஷ்கர் அமைப்பின் டாப் கமாண்டரான மூசாதான், பஹல்காம் தாக்குதல் சம்பவ த்துக்கு மூளையாக இருந்தவன் ஆவான். காஷ்மீரில் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும் மூசா முக்கிய பங்கு வகித்தான். மற்ற 2 பயங்கரவாதிகளும் கூட, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள்தான் என தெரிய வந்துள்ளது. அவர்கள் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும் அவர்களும் ஏதோ ஒரு வகையில் உடந்தையாக இருந்துள்ளனர் என காஷ்மீர் போலீசார் கூறினர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து எந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாத வேட்டையை பாதுகாப்பு படையினரும் புலனாய்வு அமைப்புகளும் தீவிரப்படுத்தின. தாக்குதல் நடத்திய சதிகாரர்களுக்கு புகலிடம் அளித்ததாக பஹல்காமை சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோத்தார், பஷீர் அகமது Parvaiz Ahmad Jothar and Bashir Ahmad ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான், ஸ்ரீநகரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதன்பிறகு, பாதுகாப்புப்படையினர் எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாக இன்று 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, பார்லிமென்ட்டில் விவாதம் துவங்கிய அதே நாளில், பஹல்காம் அட்டாக்கில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப்படையினரின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி