கெடு முடிந்தும் இங்க இருந்தா..! பாகிஸ்தானியருக்கு கடும் எச்சரிக்கை Pahalgam terror attack Pakistan
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியான சம்பவத்தால் இந்தியா, பாகிஸ்தான் உறவு முடிவுக்கு வந்துள்ளது. சிந்து நதிநீர் நிறுத்தம்; பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசா ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி அறிவித்தார். பதிலுக்கு பாகிஸ்தானும் சில அறிவிப்புகளை வெளியிட, இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விஷயத்தில்தீவிரமாக உள்ளார். ஒரு பாகிஸ்தானியர் கூட இந்தியாவில் இல்லை என்பதை மாநில முதல்வர்கள் உறுதிப்படுத்த வேணடும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மாநில முதல்வர்களுடன் போனில் பேசி அறிவுறுத்திய அவர், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். கல்வி, வர்த்தகம், சுற்றுலா, சினிமா, ஆன்மீக சுற்றுலா, பத்திரிகை, மாநாடு, மலை ஏறுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக விசா பெற்ற பாகிஸ்தானியர் வெளியேற வேண்டிய காலக்கெடு கடந்த 26ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. மருத்துவ காரணங்களுக்காக விசா பெற்று வந்தவர்கள் 29ம் தேதிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கைந்து நாளாகவே பஞ்சாபில் உள்ள அட்டாரி பார்டர் வழியாக பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர். பாகிஸ்தான் சென்ற இந்தியர்களும் உடனடியாக திரும்பி வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் அங்கிருந்தும் இந்தியர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் அட்டாரி - வாகா பார்டரில் மிகவும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது மத்திய அரசு விதித்த காலக்கெடுவுக்குள் வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன தண்டனை என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்படுவார்கள்; அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.