உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 155 பணயக்கைதிகள் மீட்பு! முழு விவரம் | Pakistan train hijack | BLA train hijack

155 பணயக்கைதிகள் மீட்பு! முழு விவரம் | Pakistan train hijack | BLA train hijack

உலகை அதிர வைத்த ரயில் Hijack 2வது நாளில் நடந்தது என்ன? பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஎல்ஏ என்ற பலுச் விடுதலை படை பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் உள்ளது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின் வளங்களை அரசு சுரண்டி அப்பாவி மக்களை வஞ்சிப்பதாக பயங்கரவாதிகள் தரப்பு கூறுகிறது. சென்ற ஆண்டு முதல் அங்கு அரசுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணம் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. 9 பெட்டிகளில் 400க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். இதன் பயண நேரம் 30 மணி நேரம், 30 ஸ்டேஷன்களில் ரயில் நிற்கும். நேற்று மதியம் 1 மணி அளவில் தாதர் என்ற இடத்தை அடைந்தபோது ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இன்ஜின் டிரைவர் சுடப்பட்டார். ரயில் தடம் புரண்டது. சுரங்கப்பாதைக்குள் ரயில் சென்ற போது இந்த தாக்குதல் நடந்தது. அடுத்த சில நொடிகளில் பலுச் விடுதலை படையை சேர்ந்த பயங்கரவாதிகள் ரயிலை முற்றுகையிட்டனர். துப்பாக்கி சூடு நடத்தி 450 பேரை சிறை பிடித்தனர். சிலரை விடுவித்து 200க்கும் அதிகமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உட்பட 6 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. ரயில் சிறைபிடிக்கப்பட்ட பகுதியை ஒட்டிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். சம்பவ பகுதி ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டிய மலைப்பகுதி. ராணுவ வீரர்கள் முன்னேறி செல்லும் போது மலைப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் எளிதாக சுட்டு வீழ்த்தும் வாய்ப்பு இருந்தது. ஹெலிகாப்டர், டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். சுரங்கப் பாதை அருகே ரயில் நிற்பதால் வான் வழி தாக்குதல் நடத்தினால் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சினர். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்துவிட்டோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் கொல்வோம். பாகிஸ்தான் இராணுவத்தால் கடத்தப்பட்ட பலூச் அரசியல் கைதிகள், மற்றும் காணாமல் போனவர்களை விடுவித்தால் பணயக்கைதிகளை விடுவிப்போம் என பலுச் பயங்கரவாதிகள் அறிவித்தனர். மீட்பு பணி மிகவும் சவாலாக இருந்தது. இரவில் பயங்கரவாதிகள் மலைகள் வழியாக தப்பி செல்லாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் சுரங்கப்பாதையைச் சுற்றி வளைத்தனர். 2 நாளான இன்றைய மீட்பு பணியில் தரை வழி படையினர் மூலம் 155 பணயக்கைதிகளை விடுவித்ததாகவும், 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை கூறி உள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தை மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்வதில் பாகிஸ்தான் அரசு பெரும் அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை