பாக் சதியை முறியடித்த ராணுவம்: பஞ்சாபில் பதற்றம் | Pakistani drones | air defence
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் பதிலடி கொடுக்க போவதாக கூறியது. வியாழனன்று இரவு இந்திய நகரங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் வீசிய ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இரண்டாவது நாளாக தற்கொலை டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் டிரோன்களை வீசி தாக்கியதாகவும், அந்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. உடனடியாக, இந்தியா அதனை இடைமறித்து தாக்கி அழித்தது. இதனையடுத்து சைரன் ஒலிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தானிய ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரோஸ்பூர் போலீஸ் எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து விளக்கமளித்துள்ளார். 3 பேர் காயமடைந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ட்ரோன்கள் இராணுவத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.