விஜய்க்கு கட்டுப்பாடு விதித்ததா போலீஸ்? நிர்வாகி சொன்ன தகவல்
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 5746 ஏக்கரில் பசுமை ஏர்போர்ட் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அங்குள்ள ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் உள்ளிட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலம், மக்கள் வசிக்கும் இடங்களை எடுத்து ஏர்போர்ட் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு விழுப்புரத்தில் நடந்த விஜய்யின் தவெக முதல் மாநாட்டில் பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், நடிகர் விஜய் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கவில்லை. இச்சூழலில், பரந்தூர் ஏர்போர்ட்டை எதிர்த்து போராடும் விவசாயிகள், கிராம மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்க உள்ளார். கட்சி தொடங்கி ஒராண்டு ஆன நிலையில், முதல் முறையாக விஜய் களத்துக்கு வருவது பரந்தூருக்குதான். பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பின்போதுகூட, பாதிக்கப்பட்டவர்களை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினார். தவெக தலைவர் விஜய், பரந்தூருக்கு செல்வது தொடர்பாக காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சண்முகத்தை சந்தித்து அனுமதி கேட்டுள்ளனர். விவசாயிகளை விஜய் சந்திக்க போலீஸ் அனுமதி அளித்து உள்ளதாக தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் சொன்னார்.