உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தது என்ன? அறிவிக்கிறார் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

அடுத்தது என்ன? அறிவிக்கிறார் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலர்களின் அவசர கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தந்தை - மகன் இடையே நிலவும் கசப்பு முடிவுக்கு வராத சூழல் உள்ளது. இப்போது மாவட்டச்செயலர்கள் கூட்டத்திற்கு, ராமதாசே அழைப்பு விடுத்திருப்பதால் என்ன முடிவு எடுக்கப் போகிறார்; அதை அன்புமணி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்லி வந்த ராமதாஸ், அதிமுக எம்பியான சி.வி.சண்முகம் வாயிலாக, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து வைத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பாஜ தலைவர்கள் வற்புறுத்தலுக்கு ஆளான அன்புமணி, ராமதாஸை வற்புறுத்தி பாஜவுடனான கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார். கட்சி முழுமையாக தோற்று விட்டதில், ராமதாஸுக்கு அன்புமணி மீது கடும் கோபம். சாதுர்யமாக முடிவெடுத்து தேர்தல் கூட்டணி அமைக்க அன்புமணிக்கு தெரியவில்லை என ராமதாஸ் எண்ணுகிறார். அதனால் கட்சியை முழுமையாக கையில் எடுத்து தானே கட்சியின் மொத்த நிர்வாகத்தையும் நடத்துவதோடு தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என முடிவெடுத்திருக்கிறார். தன்னுடைய முடிவுகளை செயல்படுத்தும், செயல் தலைவராக மட்டும் கட்சியில் அன்புமணி செயல்பட்டால் போதும் என முடிவெடுத்துத்தான் அவரை செயல் தலைவர் என அறிவித்தார். அதன் அடுத்தகட்டமாகத்தான், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அடுத்தடுத்து அரசியல் ரீதியில் தான் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார் என அவர் கூறினார்.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி