டயர்களை எரித்து பாமகவினர் மறியல்; போலீஸ் குவிப்பு; பதட்டம் explosives threw at panchayat office | A
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருப்பவர் ம.க. ஸ்டாலின். இவர் பாமக வடக்கு மாவட்ட செயலாளராகவும், வன்னியர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். பாமக நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். ஸ்டாலின் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். பின்னர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட ஸ்டாலின், அலுவலகத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மர்மநபர்களை தடுக்க முயன்ற இளையராஜா, அருண் ஆகியோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டயர்களை எரித்தும் சாலையில் போட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆடுதுறை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி ராஜாராம் அங்கு சென்று விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காரில் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ம.க.ஸ்டாலின் கூறினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ம.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர். #AduthuraiTownPanchayat #ExplosivesThrewPanchayatOffice #AduthuraiPresidentMKstalin #VanniarSangamProtest