பதிலடி கடுமையாக இருக்கும்: பிரதமர் மோடி பரபரப்பு | Pakistan | Pakistan-Occupied Kashmir
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. இதில், பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டது. பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதல்களையும் முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. பாகிஸ்தான் தரப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ போர் நிறுத்தம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் இந்தியாவும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். எல்லையில் தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.