தலைவர் மகனை கைது செய்யாமல் இருக்க பேரம் police Inspector suspended disha mittal ips Cuddalore police
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். மாத்தூர் கிராம ஊராட்சி தலைவராக உள்ளார். இவரது இளைய மகன் கலைவாணன் என்ற ராம்கி. கடந்த ஜூன் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த பக்கிரி மகன் பாக்யராஜ் என்பவருக்கும், கலைவாணனுக்கும் தகராறு ஏற்பட்டது. கலைவாணன் குடிபோதையில் இருந்தார். கோபத்தில் பாக்யராஜை தாக்கினார். படுகாயமடைந்த பாக்யராஜ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கலைவாணன் மற்றும் அவரது தந்தை சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தார். அதன்பிறகு, இருவரும் ஜாமினில் வெளியே வந்து விட்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் கலைவாணன், பாக்யராஜ் இருவரது குடும்பத்துக்கும் நீண்ட நாளாக முன்விரோதம் இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் கொலை நடந்தது தெரிய வந்தது. ஊராட்சி தலைவர் சுப்பிரமணியனின், மூத்த மகன் மணிமாறனையும் வழக்கில் கைது செய்ய வேண்டும் என பாக்யராஜ் குடும்பத்தினர் போலீசிடம் கூறினர். அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணை நடத்தினார். ஏற்கனவே, தானும், இளைய மகனும் கைதாகி விட்டோம்; மூத்த மகனுக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை. அவன் கொலை நடந்த இடத்தில் இல்லை. அவனை வழக்கில் சேர்க்க வேண்டாம் என இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம் சுப்பிரமணியன் கூறினார். மணிமாறன் அரசு ஊழியராக உள்ளார். வேலைக்கும் பிரச்னை வரும் என சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் மணிமாறனை வழக்கில் சேர்க்காமல் விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார்.