பொள்ளாச்சி வழக்கின் முழு பின்னணி-கைது டூ தீர்ப்பு | pollachi case judgement | CBI | pollachi case
பொள்ளாச்சியில் நடந்த தொடர் பாலியல் வன்கொடுமை, கூட்டு பலாத்கார சம்பவம் 2019ல் வெளியே வந்து மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கோவை கூடுதல் மகளிர் கோர்ட் இப்போது அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. குற்றவாளிகள் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அதிமுக அருளானந்தம், ஹெரோன்பால், பைக் பாபு, அருண்குமார் ஆகிய 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க போகும் 9 கொடூரன்களும் அப்படி என்ன செய்தனர்? கூட்டு சேர்ந்து பல பெண்களை சீரழித்தது வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? கைது முதல் தீர்ப்பு வரை 9 பேரையும் சிறையில் வைத்தே சிபிஐ சாதித்தது எப்படி என்பதை பார்க்கலாம். கொடூரன்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் ஒருவர், 2019 பிப்ரவரி 12ம் தேதி பொள்ளாச்சி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். தான் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இந்த புகார் மூலம் தான் முதன் முதலாக சம்பவம் வெளியே வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதை தொடர்ந்து கொடூரன்கள் சேர்ந்து இளம்பெண்ணை பெல்ட்டால் அடிக்கும் வீடியோ வெளியானது. பெண்ணின் கதறல் வீடியோ மொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது. இந்த சம்பவத்தில் மிகவும் முக்கியமானவர்கள் சபரிராஜனும் திருநாவுக்கரசும் தான். சபரிராஜன் சிக்கிய நிலையில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தான். தனக்கும் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வீடியோ வெளியிட்டான். ஆனால் அடுத்த மாதமே அவனை போலீசார் கைது செய்தனர். அவன் ஆப்பிள் போன் வைத்திருந்தான். அந்த போன் தான் வழக்கின் அச்சாணியாகவே மாறியது. அதை சோதித்த போது கொடூரன்களின் காம கழியாட்டம் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தது. அந்த போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்தன. பல பெண்களை கூட்டாக சீரழிக்கும் காட்சிகளும் இருந்தன. அதன் பிறகு வழக்கில் 5வது நபராக மணிவண்ணன் என்பவன் கைது செய்யப்பட்டான். 2019 மார்ச் மாதம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எஸ்பி நிஷா பார்த்திபன் வழக்கை விசாரித்தார். முதல் குற்றவாளியான சபரிராஜன் வீட்டில் அவர் சோதனை நடத்தினார். அங்கிருந்து ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டது. திருநாவுக்கரசின் செல்போன் மாதிரி சபரிராஜன் லேப்டாப்பும் எலக்ட்ரானிக் எவிடன்ஸ் அடிப்படையில் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டது. லேப்டாப்பை சோதித்த போது, ஒரே பெண்ணை பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்ததும், விலை மாதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகளும் இருந்தன. இணையதளத்தில் இருந்தும் நிறைய ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து வைத்திருந்தனர். ஒவ்வொரு நாள் விசாரணை முடிவிலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது. வழக்கின் தீவிரத்தன்மை கருதி, விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. கொடூரன்கள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்களை சோதித்து பாதிக்கப்பட்ட 20 பெண்களை சிபிஐ அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அனைவரின் பெயர், விவரம் ரகசியம் காக்கப்பட்டது. இதில் சில விலை மாதர்களும் இருந்தனர். விசாரணையை துரிதமாக நடத்திய சிபிஐ, கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீதும் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இருந்தன. அதாவது, திருநாவுக்கரசு தான் கூட்டத்தில் பெரிய கை. பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தான். உள்ளூரில் அவனை எதிர்த்து அவ்வளவு எளிதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொடூர கூட்டம், சின்னப்பாளயைத்தில் உள்ள அவனது வீட்டை தான் சம்பவத்துக்கு பயன்படுத்தி உள்ளது. இளம்பெண்களை மிரட்டி அவனது வீட்டுக்கு இழுத்து வந்து இளம்பெண்களை ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் வீடியோ எடுத்து இருக்கின்றனர். அதை காட்டி மீண்டும் மிரட்டி தங்கள் சதி வலையில் விழ வைத்திருக்கின்றனர். சம்பவத்தின் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வீடு முழுதும் சவுண்ட் ப்ரூப் செய்திருக்கின்றனர். இதனால் தான் உள்ளே என்ன நடந்தாலும் பெரிய அளவில் வெளியே சத்தம் கேட்கவில்லை. அந்த வீட்டில் பயன்படுத்தப்படாத மற்றும் பயன்படுத்திய ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன. இதுவரை நடந்த விசாரணையில் மேலும் மூன்று பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அதிமுகவில் இருந்த அருளானந்தம், ஹெரோன்பால், பைக் பாபு என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் 2வது குற்றப்பத்திரிகையை 2021ல் சிபிஐ தாக்கல் செய்தது. பின்னர் ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அதே 2021ல் மூன்றாவது குற்றப்பத்திரிகையை அவனுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்தது. ‛TN 41 attack boys என்ற பெயரில் கொடூரன்கள் வாட்ஸ்அப் குரூப் வைத்திருந்தனர். தாங்கள் பலாத்காரம் செய்த பெண்களின் வீடியோக்களை அதில் பகிர்ந்து ஒவ்வொருவரும் பார்த்து ரசித்து வந்திருக்கின்றனர். சில வீடியோக்களை சோசியல் மீடியாவிலும் அந்த கூட்டம் பதிவு செய்திருந்தது. வழக்கு விசாரணையின் போது அவை நீக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் தான். அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை பெண்கள். சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் கோவை கோரட்டில் விசாரணை துவங்கியது. பாதிக்கப்பட்ட பெண்களில் 7 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களது அடையாளம் வெளியே தெரியாமல் இருக்க, அவர்கள் ஆஜராகும் போதெல்லாம் மூடிய அறையில் விசாரணை நடந்தது. குற்றவாளிகள் மீது மொத்தம் 76 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்களும், கோர்ட் தாமாக முன் வந்து 11 ஆவணங்களையும் மார்க் செய்தன. விசாரணையின் போது குற்றவாளிகளுக்கு எதிராக 30 விதமான எவிடன்ஸ்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் லேப்டாப், செல்போன்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களாகவும், குற்றவாளிகளை சிக்க வைத்த ஆதாரங்களாகவும் இருந்தன. மொத்தம் 1500 பக்கங்களில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணை முடியும் வரை ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. வலுவான ஆதாரங்கள், உறுதியான சாட்சிகள் என எல்லாம் கொடூரன்கள் 9 பேருக்கும் எதிராக அமைந்தன. இதனால் தான் அவர்களால் தப்ப முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடும் அபாயம் இருந்ததால், கைது முதல் இப்போது வரை 9 பேரில் ஒருத்தனுக்கு கூட ஜாமின் கிடைக்கவில்லை. கைது முதல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக 9 பேரும் சிறையில் தான் இருக்கின்றனர். நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்காக அவருக்கு மாறுதல் வழங்குவது கூட நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்படி தான் தமிழகமே உற்று நோக்கிய இந்த வழக்கில் கொடூரன்கள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.