கர்ப்பிணியை தள்ளிவிட்டவனுக்கு திங்களன்று தண்டனை | Pregnant woman | Sexually harassing | Moving train
ஆந்திராவின் சித்தூரை சேர்ந்த 35 வயது ரேவதி என்பவர் திருப்பூர் அவினாசியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தபோது பிப்ரவரி 6ம் தேதி சொந்த ஊர் செல்ல கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் சென்றார். ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை வந்தபோது, அந்த பெண் இருந்த பெட்டியில் அவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது அதில் ஏறிய கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவன், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். கர்ப்பிணி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த ஹேமந்த்ராஜ், அந்த பெண்ணை கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி ரயில்வே போலீசார் விசாரித்தபோது ஹேமந்த்ராஜை அடையாளம் காட்டினார். கேவி குப்பம் செல்லும் வழியில் அவனை கைது செய்த போலீசார், 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், ஹேமந்த்ராஜ் குற்றவாளி என மாவட்ட நீதிபதி மீனாகுமாரி இன்று அறிவித்தார். அவனுக்கான தண்டனை விவரம் திங்களன்று அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது