தஹாவூர் ராணா விவகாரம்: மோடிக்கு நெட்டிசன்கள் பாராட்டுமழை Prime Minister Narendra Modi Tahawwur Ran
2008 ல் 166 உயிரை பலிவாங்கிய மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளி தஹாவூர் ராணாவை அமெரிக்கா நாடு கடத்தியது. நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்ட தனி விமானம் நேற்று மாலை டில்லி வந்தது. விமான நிலையத்திலேயே ராணாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பிறகு, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்துக்கு ராணா கொண்டு செல்லப்பட்டார். அங்கு ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் துருவித் துருவி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மும்பை தாக்குதலில் லஷ்கர் அமைப்பை தாண்டி பாகிஸ்தானின் நேரடி தொடர்பு சம்பந்தமான விஷயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்பட்ட அதே நாளில் 2 நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணா நாடு கடத்தல் பிரதமர் மோடியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: அஜ்மல் கசாப், ராணா போன்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி விட்டு சென்றனர். இதுபோன்ற கிரிமினல்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார் என, அனுராக் தாக்குர் சொன்னார். அனுராக் தாக்குரின் கருத்து தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட அதே நேரத்தில் ராணா பற்றி 2011ல் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி போட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது. மும்பை தாக்குதல் சம்பவத்தை நடத்தியது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு. அதனுடன் தொடர்புடைய 2 பாகிஸ்தான் வம்சாவளியினரை அமெரிக்காவின் எஃப்பிஐ FBI அதிகாரிகள் அந்நாட்டில் 2009ம் ஆண்டில் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் டேவிட் ெஹட்லி. அமெரிக்க வாழ் பாகிஸ்தான் வம்சாவளியைச்சேர்ந்தவர். 2008 ல் மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன், மும்பைக்கு ஐந்து முறை வந்து ெஹட்லி வேவு பார்த்தார். அவர் கொடுத்த முக்கிய தகவல்களின் அடிப்படையில்தான் மும்பையில் தாக்குதலை லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்தினர். தான் மும்பை வந்து வேவு பார்ப்பதற்கான உதவிகளை நண்பர் தஹாவூர் ராணா செய்தார் என ெஹட்லி வாக்குமூலம் அளித்தார். ெஹட்லி, ராணா இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்கள். ராணா கனடாவாழ் பாகிஸ்தான் வம்சாவளி. அவர் ஒரு டாக்டர். இவர்கள் தொடர்பான வழக்கை அமெரிக்க கோர்ட் விசாரித்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டு ெஹட்லி எஃப்பிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அதனால் அவருக்கு 35 ஆண்டு தண்டனை விதித்து 2011ல் தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், ராணாவுக்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் நேரடி பங்கு இல்லை என கூறி அந்த குற்றச்சாட்டில் இருந்து அமெரிக்க கோர்ட் அவரை விடுவித்தது. ஆனாலும் தாக்குதல் நடத்த உதவிய வகையில் அவரும் குற்றவாளி என அறிவித்தது. 2011ல் குஜராத் முதல்வராக இருந்தார், மோடி. அமெரிக்க கோர்ட் தீர்ப்பு கூறியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவு கொள்கையில் தோற்று விட்டதாக மோடி குற்றம்சாட்டினார். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தஹாவூர் ராணாவை அப்பாவி என அமெரிக்கா அறிவித்து விட்டது. இது, இந்திய இறையாண்மைக்கு நேர்ந்த அவமானம். இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு என, அந்த பதிவில் மோடி கூறியிருந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் அந்த ட்விட்டர் பதிவு, ராணா இந்தியா கொண்டு வரப்பட்ட நேற்று இண்டர்நெட்டில் வேகமாக பரவியது. சொன்னதை செய்யும் ஒரே தலைவன் கேப்டன் மோடி.... பிரதமர் மோடி சாதித்து விட்டார்; மோடி பிரதமராக இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்பது போன்ற கமென்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர். மும்பை தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர் அமைப்புக்கு உதவியதற்காக தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க கோர்ட் 2013ல் தீர்ப்பளித்தது. ஆனால், பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு, ராணாவை 2020ல் அமெரிக்க அரசுவிடுதலை செய்தது. அதேநேரத்தில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து நமது சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டிக்க மோடி அரசு உறுதியுடன் இருந்ததால் மீண்டும் ராணாவை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது, ராணா நாடு கடத்தல் விவகாரத்தை மோடி எழுப்பியதும் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்துதான் நாடு கடத்தும் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டு நேற்று ராணா டில்லி கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.