மாணவர்களை கயிறு மூலம் மீட்ட பரபரப்பு காட்சிகள் Puducherry | Arupadai veedu Medical College|
ஃபெஞ்சல் புயல் மற்றும் இடைவிடாமல் பெய்த கன மழையால் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நேற்று இரவு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது தென் பெண்ணை ஆற்றில் கலந்து வெள்ளப் பெருக்கானது. தென் பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. விழுப்புரம் அருகே உள்ள அரசூர், இருவேல் பட்டு முதலான இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதை விட மிக மோசமாக கடலூர் மாவட்டத்தில் கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், ரெட்டிச்சாவடி முதலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. புதுச்சேரியின் கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம், முள்ளோடை போன்ற பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கின. எப்போதும் பிசியாக இருக்கும் புதுச்சேரி - கடலூர் சாலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் புதுச்சேரி - கடலூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழக பகுதியான ரெட்டிச்சாவடிக்கு மிக அருகில், புதுச்சேரியின் கிருமாம்பாக்கம் உள்ளது. இங்கு அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியும் அதனுடன் இணைந்த மருத்துவமனையும் செயல்படுகிறது. தென் பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், அதன் கிளை ஆறான மலட்டாறு வழியாக மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்தது.