2 ரயிலில் சினிமா பாணியில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி robbery in 2 trains howrah Bangalore Express an
சண்டிகரில் இருந்து மதுரைக்கு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நெல்லூர் அருகே காவலி என்ற இடத்தின் அருகே வந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. அந்நேரம் பார்த்து ரயிலில் ஏறிய மர்ம ஆசாமிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சில பெண் பயணிகளின் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கைப்பைகளை திருடிச் சென்றனர். செயினை பறிகொடுத்த பயணிகள் திடுக்கிட்டு விழித்தபோதுதான் இந்த துணிகர திருட்டு நடந்தது தெரிய வந்தது. டிடிஆரிடம் பயணிகள் புகார் கூறினர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, அரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. சம்பவம் பற்றி காவலி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹவுராவில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேற்றிரவு காவலி அருகே சென்றபோது தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது தெரிய வந்தது. அந்த ரயிலில் இருந்த சில பயணிகளும்கூட செயின், கைப்பை திருட்டுபோனதாக புகார் கூறியுள்ளனர். இரு ரயில்களும் அல்லூர் ரோடு - படுகபாடு ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றபோதுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆக மொத்தத்தில் ரயில்கள் தொழில்நுட்ப கோளாறால் நிற்கவில்லை. தடம் மாற்றப்படும் இடத்தில் தண்டவாளத்தில் ஏதோ தில்லுமுல்லு வேலைகளை செய்து தொழில்நுட்ப கோளாறை கொள்ளையர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை பார்த்துதான் ரயில்களை டிரைவர்கள் நடுவழியில் நிறுத்தி உள்ளனர். உடனே கொள்ளையர்கள் ரயிலில் ஏறி, கொள்ளையடித்துள்ளனர். இரு ரயிலிலும் கொள்ளை கும்பலில் உள்ள ஆசாமிகள் பயணிகளோடு பயணியாக பயணம் செய்திருக்கலாம். எந்த பெட்டியில் யார் யாரிடம் கொள்ளையடிக்க முடியும் என்ற தகவலை அவர்கள் கும்பலில் உள்ள மற்றவர்களுக்கு முன்கூட்டியே பாஸ் செய்திருக்கலாம். அதனால் குறிப்பிட்ட பெட்டியில் ஏறி சில நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு சீக்கிரமாக கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பும்கூட நெல்லூர் அருகே ரயிலில் கொள்ளை நடந்துள்ளது. அப்போது, அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகளிடம் நகைகளை கொள்ளையடித்தனர். அதை வைத்து பார்க்கும்போது அதே கும்பலே இம்முறையும் கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவலி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி ரயிலை நிறுத்தி மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.