செங்குத்தான மலைப்பகுதியில் போலீசார் சிக்கி கொண்டதால் பரபரப்பு! Rowdy| Police searching|Tenkasi
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். வயது 30. இவர் மீது தென்காசி, திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னையில் சுமார் 90 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சொந்த ஊரான கடையம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 11 வழக்குகள் உள்ளன. திருட்டு, கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் பல வழக்குகளில் கைதாகி சிறை சென்று திரும்பி உள்ளார். தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பாலமுருகன் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளார். கடைசியாக அண்டை மாநிலமான கேரளாவில் திருட்டு வழக்கில் கைதான பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, திருச்சூர் சிறையில் இருந்து பாலமுருகனை போலீசார் அழைத்து வந்தனர். மீண்டும் அவரை திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்றபோது பாலமுருகன் போலீசாரிடம் இருந்து தப்பினார். கடந்த இரண்டு வாரங்களாக போலீஸார், பாலமுருகனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவர் கடையம் ராமநதி அணை அருகே 1000 அடி உயரமுள்ள மலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்புப் படையைச் சேர்ந்த 50 போலீசார் நேற்று இரவு முதல் பாலமுருகனை மலையில் தேடத் தொடங்கினர்.