₹150 கோடியில் நவீன வசதிகளுடன் RSS ஆபீஸ் | RSS | Delhi | New Head quarters
ஆர்எஸ்எஸ் புதிய அலுவலகம் டெல்லியில் பிரமாண்ட கட்டடம்! ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைமை அலுவலகம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது. டில்லி, ஜன்டேவாலனில் அதன் அலுவலகம் சிறிய அளவில் இயங்கியது. அதை புதுப்பிக்கும் பணி 2018 தொடங்கி, தற்போது முடிந்துள்ளது. புதிய அலுவலகம் வரும் 19ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆர்,எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 3.75 ஏக்கரில் சுமார் 5 லட்சம் சதுர அடிகளில் 150 கோடி ரூபாய் செலவில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. 12 மாடிகள், 300 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்துக்கு, ஆர்எஸ்எஸ் நிறுவன தலைவர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் நினைவாக, கேசவ் கஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சாதனா, பிரேர்னா, அர்ச்சனா என மூன்று பிரிவுகளாக அலுவலகம் அமைந்துள்ளது. சாதனா பிரிவு முதன்மை நிர்வாக மையமாக செயல்படுகிறது. பிரேர்னா, அர்ச்சனா பிரிவுகளில் குடியிருப்புகள் உள்ளன. குஜராத் கட்டிட கலைஞர் அனுப் தேவ் இதை வடிவமைத்துள்ளார். பாரம்பரிய இந்திய கட்டிக் கலையை இந்த அலுவலகம் பிரதிபலிக்கிறது. சூரிய ஒளி மின்சார வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவமனை, மருந்தகம், உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. 10வது மாடியில் கேசவ் நூலகம் உள்ளது. ஆராய்ச்சி மற்றும் சித்தாந்த ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நூலகத்தில் இந்து, பவுத்த, சீக்கிய, இஸ்லாமிய, கிறிஸ்துவம் தொடர்பான சுமார் 8 ஆயிரத்து 500 நூல்கள் இடம் பெற்றுள்ளன. 1300 பேர் அமரக் கூடிய வகையில் மூன்று ஆடிட்டோரியங்கள் உள்ளன. வளாகம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.