ரஷ்ய அதிபரின் அறிவிப்பை நம்பாத கீவ் நகர மக்கள் Russia - Ukraine War| War against Ukraine on Easter
ஈஸ்டர் திருநாளையொட்டி உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக 24 மணி நேரம் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். இரு நாட்டு மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் ஈஸ்டர் பண்டிகைய கொண்டாட இது உதவும் எனவும் புடின் கூறி இருந்தார். புடினின் அறிவிப்பு, உக்ரைன் படைகளுக்கும், மக்களுக்கும் சற்று ஆறுதலை தந்தது. ஆனால், ரஷ்யா சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். ஈஸ்டருக்காக இரு தரப்பிலும் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. நாங்கள் சொன்னபடி நடந்து கொள்கிறோம். ஆனால், ரஷ்ய அதிபர் புடின் தனது வாக்கை மீறிவிட்டார். உக்ரைனின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. நான்கு முக்கிய இடங்களில் 59 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஈஸ்டர் நாளில் கூட உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாதது கண்டனத்திற்குரியது என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், 290 ட்ரோன்களை பயன்படுத்தி, 300க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி ஈஸ்டர் நாளிலும் தொடர் தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என உக்ரைன் ராணுவம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈஸ்டர் நாளில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறித்த உடனேயே, உக்ரைனின் கீவ் நகர மக்கள் அதை வெற்று அறிவிப்பு என்றும், ஏமாற்று வேலை எனவும் கூறினர். புடின் ஏமாற்றுக்காரர். ரஷ்யா ஒரு தீவிரவாத நாடு. அந்நாட்டு அதிபரின் சொற்களில் நம்பிக்கை இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர். இப்போது அவர்கள் நினைத்தது போலவே, ரஷ்யா நடந்து கொள்வதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.