ஜெர்மனி அதிபரால் உக்ரைன், நேட்டோ நாடுகள் அதிர்ச்சி | Russia vs Ukraine | Scholz talks Putin | NATO
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் திடீரென தீவிரம் அடைந்துள்ளது. ஒரு வாரமாக இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. சில நாட்கள் முன்பு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை அனுப்பி ரஷ்யாவில் குண்டு மழை பொழிந்தது உக்ரைன். இதற்கு பதிலடியாக 145 ட்ரோன்களை உக்ரைனுக்குள் அனுப்பி தாண்டவமாடியது ரஷ்யா. போர் மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில் திடீரென ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜெர்மனி அதிபர் போன் போட்டு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தீவிரமாக ஆதரவு அளித்து வருகின்றன. இப்படியொரு சூழலில் தான் புடினிடம் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் Olaf Scholz தொலைபேசியில் பேசி உள்ளார். உக்ரைனில் நிரந்தரமாக அமைதி திரும்ப வேண்டும். நேர்மையான முறையில் உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா முன்வர வேண்டும் என்று புடினிடம் அவர் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் நாங்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்பதையும் புடினிடம் அவர் சொன்னதாக ஜெர்மனி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெர்மனி அதிபரின் போர் நிறுத்த பேச்சுக்கு புடின் உடன்பாடு தெரிவித்தார். ஆனால் போரை நிறுத்த வலியுறுத்தும் எந்த ஒரு ஒப்பந்தமும் ரஷ்யாவின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று புடின் கண்டிசன் போட்டதாக ரஷ்யா கூறி உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுத உதவி, நிதி உதவி செய்தது அமெரிக்கா. அதற்கு அடுத்து அதிகளவில் ஆயுதம், மனிதாபிமான உதவிகளை வழங்கியது ஜெர்மனி தான்.