ரகசியங்களை கசியவிட்ட ஆயுத ஆலை ஊழியர் கைது | UP ATS | Ordnance Factory | Firozabad | Pakistani agent
உ.பி., பெரோசாபாதில் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நம் ராணுவத்துக்கு தேவையான ட்ரோன், நவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்து வருபவர் ரவீந்திரநாத். இவரை பேஸ்புக் மூலம் நேஹா சர்மா என்ற பெண் சென்ற ஆண்டு தொடர்பு கொண்டார். தான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயில் பணிபுரிவதாக கூறிய அவர், பல ஆசை வார்த்தைகள் கூறி ரவீந்திரநாத்தை வலையில் வீழ்த்தினார். இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை தனக்கு தரும்படியும் நேஹா கேட்டதாக கூறப்படுகிறது. அவரது பேச்சு மற்றும் அழகில் மயங்கிய ரவீந்திரநாத், ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, ரவீந்திரநாத்திடம் உபி பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மொபைலில் நேஹாவின் பெயரை சந்தன் ஸ்டோர் கீப்பர் 2 என பதிந்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலையின் தினசரி தயாரிப்பு பட்டியல், அரசு அறிக்கைகள், ரகசிய கடிதங்கள், ட்ரோன்கள் தயாரிப்பு தொடர்பான ஆவணங்கள், ககன்யான் திட்டம் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை வாட்ஸாப் வாயிலாக நேஹாவுக்கு அனுப்பியிருந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதற்காக கணிசமான தொகை வழங்குவது குறித்து அவர் பேரம் பேசியிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.