வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பு! Seeman | NTK | Varunkumar | Trichy
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த வருண்குமாரையும், அவரது குடும்பத்தினரையும், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் பேட்டியில், வருண்குமார் எஸ்.பி. குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருண்குமார் போலீசில் புகார் அளித்தார். மேலும் திருச்சி நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், திருச்சி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆஜராகவில்லை. சென்னையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்க சென்றிருப்பதால், நீதிமன்றம் வர முடியவில்லை என, நீதிபதியிடம் சீமான் வழக்கறிஞர்கள் கூறி, ஆஜராக ஒருநாள் அவகாசம் அளிக்குமாறு கோரினர். இதனால் 8ம் தேதி கண்டிப்பாக, நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி விஜயா. இதை ஏற்றுக்கொண்ட சீமான், நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது, வழக்கு தொடர்பாக வருண்குமார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களின் நகல்களை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என, நீதிபதியிடம் சீமான் தரப்பு கோரியது. இதையடுத்து அந்த ஆறு ஆதாரங்கள், சீமானிடம் வழங்கப்பட்டன. தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 29க்கு தள்ளி வைக்கப்பட்டது.