மலை மீது பெண்ணுக்கு கொடுமை போதை வாலிபர்கள் வெறிச்செயல் | sexual assault | Krishnagiri | Police
நகைகளை பறித்து பாலியல் கொடுமை காமுகனை சுட்டு பிடித்த போலீஸ் மலை உச்சியில் பெண்ணுக்கு பகீர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சையத் பாஷா மலைக்கு கடந்த 19ம்தேதி மாலை ஒரு ஆணும் பெண்ணும் சென்றனர். பெண்ணுக்கு 30 வயது. ஆணுக்கு 35 வயது. இருவருமே திருமணம் ஆனவர்கள். ஆனால் உறவினர்கள். மலையை அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு மது போதையில் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் இவர்களை பார்த்துள்ளனர். நான்கு பேரும் சேர்ந்து ஆணை தாக்கினர். பெண் அணிந்திருந்த கம்மல், செயினை பறித்துக் கொண்டனர். ஆண் கையில் வைத்திருந்த 7 ஆயிரம் ரூபாயையும் பிடுங்கிக் கொண்டனர். அவர்களில் 2 ஆசாமிகள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இன்னும் 2 வாலிபர்கள் அதை வீடியோ எடுத்தனர். பிறகு பெண்ணின் செல்போனை பறித்து கூகுள் பே மூலம் 7 ஆயிரம் ரூபாயை தங்கள் கணக்குக்கு அனுப்பிக் கொண்டனர். மலைக்கு மேல நடந்தத மறந்துட்டு ஊருக்கு போய் சேரணும்... இல்லன்னா இந்த வீடியோவை நெட்டுல வைரல் ஆக்கிடுவோம் என பெண்ணை மிரட்டி அனுப்பினர். கீழே வந்ததும் அந்தப் பெண் கதறி அழுதார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் என்ன ஏது என விசாரித்ததும் பணம், நகைகளை 4 பேர் பறித்துக் கொண்டனர் என அழுதபடி கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்தால் உங்களுக்குள் என்ன உறவு? என கேட்பார்கள். மானம் போய் விடும் என நினைத்த ஜோடி அவசர அவசரமாக பஸ்சை பிடித்து ஊருக்கு சென்று விட்டது. டவுன் போலீசார் வந்து தகவல் சொன்ன நபர்களிடம் விசாரித்தனர். திருப்பத்தூர் செல்லும் பஸ்சில் அவர்கள் ஏறியது தெரிய வந்தது. சம்பவம் நடந்த மலைக்கு போலீசார் சென்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் ஆக்டிவ்வாக இருந்த செல்போன் நம்பர்களை நிபுணர்கள் உதவியால் போலீசார் கண்டுபிடித்தனர். செல்போன் நம்பர்களை வைத்து திருப்பத்தூரில் வசிக்கும் ஆண், பெண் இருவர் வீட்டுக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போதுதான், மலை மீது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நகை பணத்தை பறித்துக் கொண்டு பெண்ணையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை வேகமாக துவங்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் போனில் இருந்து பணம் டிரான்ஸ்பர் ஆன போன் நம்பரை போலீசார் முதலில் வாங்கினர். அதன்மூலம், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கிருஷ்ணகிரி டவுனை சேர்ந்த கலையரசன் 22, அபிேஷக் 21 சுரேஷ் 23 நாராயணன் 22 என்பது தெரிய வந்தது. நான்கு பேரும் சம்பவம் நடந்த அன்று மலையை ஒட்டி உள்ள சாலையில் பைக்கில் செல்லும் சிசிடிவி வீடியோவையும் போலீசார் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, நேற்றிரவே கலையரசன், அபிேஷக்கை போலீசார் அவரவர் வீட்டில் வைத்து தட்டி தூக்கினர். இருவரிடம் நடத்திய விசாரணையில் நகை பணத்தை பறித்து பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதை ஒப்புக் கொண்டனர். போதை தெளிந்த பிறகுதான் எவ்வளவு பெரிய தவறு என தெரிந்தது. அதனால் ஊரை விட்டு தப்பிச் செல்ல முடிவு செய்தபோதுதான் நீங்கள் வந்து பிடித்து விட்டீர்கள் என போலீசாரிடம் இருவரும் வாக்குமூலம் அளித்தனர். சுரேஷும் நாராயணனும் தான் பாலியல் கொடுமை செய்தனர். நாங்கள் பணத்தை மட்டுமே பறித்தோம் எனவும் கூறினர். சுரேஷ், நாராயணன் எங்கே என போலீசார் கேட்டதும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் உள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கலையரன், அபிேஷக் கூறினர். அதையடுத்து, இருவரையும் பிடிக்க இன்று காலை 11.30 மணிக்கு போலீஸ் படையினர் சென்றனர். போலீசை பார்த்ததும் சுரேஷும் நாராயணனும் ஓடினர். பிடிக்க முயற்சித்த போலீசாரை இருவரும் கத்தியால் கிழித்துவிட்டு தப்ப முயன்றனர். இதில், 2 போலீசாரில் கைகளில் கத்திவெட்டு விழுந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஆசாமிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சுரேஷ் காலில் குண்டு பாய்ந்தது. நாராயணன் மீது குண்டுபடவில்லை. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் பயத்தில் தடுமாறி கீழே விழுந்தான். இதில், அவன் கால் முறிந்தது. வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார், குண்டடிபட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெண்ணை பாலியல் கொடுமை செய்த வாலிபர்களை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.