சசி தரூரை மோடி அரசு துருப்புச்சீட்டாக்கியது ஏன் Shashi Tharoor | operation sindoor | modi vs rahul
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பயங்கரவாதிகளை குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தது தொடர்பாகவும், முக்கியமான நட்பு நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய குழு அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் எம்பி சசி தரூர், திமுக எம்பி கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் 40 எம்பிக்கள் தனித்தனி குழுவாக நட்பு நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கின்றனர். ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது என்பதையும் பாகிஸ்தான் எப்படி எல்லாம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் நட்பு நாடுகளுக்கு எடுத்து சொல்வார்கள். தலைமை தாங்கும் சசிதரூர், கனிமொழி உள்ளிட்ட 7 எம்பிக்கள் பெயர்கள் மட்டும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. குழுக்களில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். மத்திய அரசு பெயர்களை தேர்வு செய்த பின்னணியில் நடந்த ஒரு விஷயம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சசி தரூர் பெயரை காங்கிரஸ் பரிந்துரை செய்யவில்லை. ஆனால் பரிந்துரையை தாண்டி சசி தரூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்த தகவல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மூலம் வெளியாகி இருக்கிறது. அதாவது, சசி தரூர் உட்பட 7 பேர் பெயரை மத்திய அரசு அறிவித்ததும், ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டார்.