30 குண்டு முழங்க உடல் தகனம்: அமைச்சரிடம் கதறி அழுத மனைவி SSI shanmugavel hacked to death tirupur pol
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சண்முகவேல். 57. இவர் நேற்றிரவு ஆயுதப்படை கான்ஸ்டபிள் அழகுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதாக தகவல் வந்ததும் சண்முகவேலும், அழகும் விரைந்தனர். எம்எல்ஏ தோட்டத்தில் வேலை பார்க்கும் திண்டுக்கல்லை சேர்ந்த மூர்த்தியும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன் மணிகண்டன் ஆகிய 3 பேரும் மது குடித்து விட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் விசாரித்தார். சண்டையை விலக்க முயன்றார். அப்போது, ஃபுல் போதையில் இருந்த மூர்த்தியும், அவரது மகன்களும் திடீரென சண்முகவேலை விரட்டி விரட்டி வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நள்ளிரவில் போலீசார் சென்று தடயங்களை சேகரித்தனர். காலையில் சண்முகவேலின் சடலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சண்முகவேல் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். நேர்மையாக பணி செய்தவருக்கா இந்த கதி என கதறி அழுதனர். போலீசுக்கு கூட பாதுகாப்பில்லையா? இப்படி ஒரு மோசமான ஆட்சியா நம் நாட்டில் நடக்குது? என உறவினர்கள் கொந்தளித்தனர். போலீஸ் பாதுகாப்புக்கு துப்பாக்கி கொடுக்காதது ஏன்? எனவும் கேட்டனர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன், தங்கபாண்டியன் மீது திண்டுக்கல்லில் பல குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அவர்களை வேலைக்கு வைக்கும்போது இது தெரியாதா? என போலீசார் எம்எல்ஏ மகேந்திரனிடம் விசாரித்தனர். தலைமறைவான மூர்த்தி, மணிகண்டன், தங்கப்பாண்டியனை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடுமலையில் உள்ள சிவசக்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் சாமிநாதன், டிஜிபி சங்கர்ஜிவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சண்முகவேலின் மனைவி உமாமகேஸ்வரி, மகன் லலித்குமார், மகள் சத்யாவுக்கு அமைச்சர், டிஜிபி ஆறுதல் கூறினர். அப்போது, மனைவி, மகன், மகள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. அதன்பிறகு, மின்மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.