மஞ்சுவிரட்டுக்கு சென்ற ரவுடி; விரட்டி, விரட்டி பழிதீர்த்த கும்பல் | Sullan Madhan | Sivangai Crime
கரும்புத் தோட்டத்தில் விரட்டிச் சென்று கொடூரத் தாக்குதல் - மதுரையைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை புதுப்பட்டியை சேர்ந்த 26 வயதான சுள்ளான் மதன், தனது மாட்டுடன் நண்பர்கள் 4 பேருடன் சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த 9 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயன்றது. இதனால் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடினர். மதன் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தார். அவரை விடாமல் விரட்டிச்சென்ற கும்பல், சரமாரியாக வெட்டியது. மதன் ரத்த வெள்ளத்தில் பலியானார். கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. தகவல் அறிந்ததும் சிவகங்கை நகர் போலீசார், விரைந்து சென்று மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சரித்திர பதிவேடு குற்றவாளியான சுள்ளான் மதன் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த அக்டோபர் 7ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லங்குடி தோட்டத்தில் துாங்கி கொண்டிருந்த ஜெயசூர்யா, அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் மதன் கைதானார். மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அந்த சமயத்தில் மதுரையைச் சேர்ந்த மிதுன் மாணிக்கம் என்பவரது தாய் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதால் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருமங்கலத்தை சேர்ந்த பிரதீப், மானாமதுரையை சேர்ந்த பாலமுருகன் மற்றும் பிரபு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இன்ஸ்டா பதிவால் கொலை நடந்ததா? இரட்டை கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் மதன் கொல்லப்பட்டரா? என்பது குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது. மேலும் தலைமறைவாக உள்ள 8 பேரை 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனைக்கு பிறகு மதனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதனின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மதன் உடல் சொந்த ஊரான புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் டூவீலர்களின் பின்தொடர்ந்து சென்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #SullanMadhan #A Chilling Backstory #rowdy #gang pursues #revenge #Sullan Madhan #Sivangai Crime