உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுனிதா ரிட்டனில் மிரட்டலான 4 மர்மம் | sunita williams return-4 mystery | SpaceX Dragon | NASA | ISS

சுனிதா ரிட்டனில் மிரட்டலான 4 மர்மம் | sunita williams return-4 mystery | SpaceX Dragon | NASA | ISS

28,000km வேகம்; 17 மணி நேர திக் திக் 4 எமகாதக கட்டம் தாண்டியது எப்படி? சுனிதா பூமி திரும்பியதன் பின்னால் 4 மர்மங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்களாக தவித்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் இப்போது பத்திரமாக பூமி திரும்பி இருக்கின்றனர். உலகமே மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறது. குறிப்பாக இந்தியா சுனிதாவின் வருகையை கொண்டாடி வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மொத்தம் 17 மணி நேர பயணம். எந்த கணமும் எதுவும் நடக்கலாம் என்ற நிச்சயமற்ற நிலை. பல சவால்களை கடந்து தான் சுனிதா பூமி திரும்பி இருக்கிறார். 17 மணி நேர பயணத்தின் ஒவ்வொரு கணமும் முள் மேல் நடப்பது போன்றது. ஒவ்வொரு நிகழ்வையும் மனதில் கற்பனை செய்து பார்த்தால் அறிவியல் உலகின் மாயாஜாலம் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படி என்ன தான் நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். முதல் ஆச்சர்யம் சுனிதா 286 நாட்கள் தங்கி இருந்த சர்வதேச விண்வெளி மையம். இது பல நாடுகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி கூடம். பூமிக்கு மேலே வளிமண்டலத்துக்கு அப்பால் ஈர்ப்பு விசையே இல்லாத ஒரு இடத்தில் அந்தரத்தில் மிதக்கிறது. கிட்டத்தட்ட பூமியில் இருந்து 400 முதல் 420 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரே இடத்தில் அப்படியே நிற்கவில்லை. மாறாக, பூமியின் கீழ் சுற்று வட்ட பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. காரில் 100 கிலோ மீட்டர் வேகம் தாண்டினாலே நாம் பதைபதைத்து போகிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சி கூடம் மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த படி பூமியை சுற்றி வருகிறது. நம் ஊரில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலை விட 215 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கிறது. விமானத்தின் உச்ச வேகத்தை விட 31 மடங்கு கூடுதல் வேகம் என்றால் யோசித்து பாருங்கள். சராசரியாக 90 நிமிடத்தில் பூமியை ஒரு ரவுண்ட் அடித்து விடும். ஒரு நாளைக்கு 16 தடவை பூமியை சுற்றி வருகிறது. இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் போது, ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 16 முறை சூரிய உதயம் ஏற்படும். 16 முறை சூரிய அஸ்தமனம் நிகழும். மணிக்கு 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ராக்கெட் மூலம் விண்கலம் அனுப்ப வேண்டும். அதை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்க வேண்டும். அங்கிருப்பவர்களை ஏற்றிக்கொண்டு, விண்வெளி மையத்தில் இருந்து விண்கலனை பிரிக்க வேண்டும். பின்னர் பூமிக்கு கொண்டு வர வேண்டும். இவ்வளவு விஷயம் நடக்கும் போதும் சர்வதேச விண்வெளி மையம் அதே 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும். கொஞ்சம் நெரிசலான இடத்தில் காரை பார்க்கிங் செய்வதே அவ்வளவு கடினமான காரியமாக இருக்கும் போது, இவ்வளவு வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் விண்கலத்தை இறக்கி, ஆட்களை ஏற்றிக்கொண்டு பூமி திரும்ப வேண்டும் என்றால்.... நினைத்து பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. ஆனால் அதை தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கச்சிதமாக செய்து காட்டி இருக்கிறது. இதில் மிகவும் அபாயகரமான 4 கட்டங்களையும் கச்சிதமாக கடந்து அசத்தி இருக்கிறது. அதாவது, சுனிதாவும் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளிக்கு சென்றனர். மிஷன் படி அடுத்த 8 நாட்களில் திரும்பி வர வேண்டும். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்களால் திரும்ப முடியவில்லை. அவர்களை ஏற்றாமல் ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் பூமி திரும்பியது. இதனால் தான் 2 பேரின் நிலை என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் ஒரு மிஷனை ஆரம்பித்தது. அதன்படி 6 மாத ஆராய்ச்சி திட்டத்துடன் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் ஏற்கனவே சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் தவித்துக்கொண்டு இருந்ததால், ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தில் நாசா சில மாறுதல்களை கொண்டு வந்தது. 4 பேரை அனுப்புவதற்கு பதில் 2 பேரை அனுப்ப வேண்டும். 6 மாதம் கழித்து மிஷன் முடியும் போது ஏற்கனவே தவிக்கும் சுனிதா, வில்மோரையும் சேர்த்து அழைத்து வர வேண்டும் என்பது தான் அந்த திட்டம். அதன்படி ஸ்பேஸ் எக்சின் பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புறப்பட்டது. விண்கலத்தில் மொத்தம் 4 இருக்கைகள். நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 2 விண்வெளி வீரர்கள் அதில் இருந்தனர். மற்ற 2 இருக்கைகள் வெற்றிடமாக வைக்கப்பட்டன. விண்வெளியை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்ற ஆரம்பித்தது. ஏற்கனவே பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நெருக்கமாக படிப்படியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விண்வெளி மையத்துடன் விண்கலன் இணைக்கப்பட்டது. இது ஒரு சவாலான காரியம். நல்லபடியாக முடிந்ததால் திட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பின்னர் விண்கலனில் இருந்த 2 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் சுனிதா மற்றும் வில்மோரை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படியே 6 மாதங்கள் ஓடின. மிஷன் இறுதி கட்டத்தை எட்டியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 4 பேர் கொண்ட அடுத்த டீம் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இதையடுத்து ஏற்கனவே ஜூன் மாதம் சென்ற சுனிதா, வில்மோர், செப்டம்பரில் சென்ற நிக் ஹேக், அலெக்சாண்டர் ஆகிய 4 பேரும் பூமி திரும்ப தயாராகினர். சுனிதா, வில்மோர் 286 நாட்களும், நிக் ஹேக், அலெக்சாண்டர் 171 நாட்களும் விண்வெளியில் கழித்து இருந்தனர். செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராகன் விண்கலத்தில் திங்கட்கிழமை ஏறி அமர்ந்தனர். 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, டிராகனை பிரிக்க வேண்டும். இதற்கு Undocking என்று பெயர். அடுத்த 2 மணி நேரத்தில் அன்டாக்கிங் நடந்தாக வேண்டும். இது தான் மீட்பு திட்டத்தின் 2வது சவால். சரியாக காலை 10:45 மணி அளவில் undocking வெற்றிகரமாக நடந்தது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்து, பூமியின் சுற்றுவட்ட பாதையில் தனியாக பறக்க ஆரம்பித்தது டிராகன் விண்கலம். இப்போது 2வது வெற்றியும் கிடைத்து விட்டது. சர்வதேச விண்வெளி மையத்தை போல் கிட்டத்தட்ட மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் டிராகன் பறக்க ஆரம்பித்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்க ஆரம்பித்தனர். இப்படியே 15 மணி நேரமாக பூமியை சுற்றியது டிராகன் விண்கலம். அடுத்ததாக வளிமண்டல பகுதிக்குள் நுழைக்க வேண்டும். இதற்கு ரி-என்ட்ரி என்று பெயர். மொத்த திட்டத்திலும் மிகவும் சவாலான கட்டம் இதுதான். இதுவரை காற்று இல்லாத பகுதியில் டிராகன் விண்கலம் வந்தது. முதல் முறையாக வளிமண்டலத்துக்குள் நுழைய வேண்டும். மின்னல் வேகத்தில் வரும் விண்கலம் காற்று உராய்வு காரணமாக உச்ச வெப்பத்தை அடையும். கிட்டத்தட்ட 3500 டிகிரி பாரன்ஹீட். நம் ஊரில் 100 டிகிரி வெயில் அடித்தால் என்ன நிலையோ, அதை போல் 35 மடங்கு அதிக வீரியமான வெப்பம். இது விண்கலத்தை தீப்பிடித்து வெடிக்க வைக்கும் அபாயம் கொண்டது. இவ்வளவு வெப்பத்தை தாங்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அசம்பாவிதம் நடக்காது என்ற உத்தரவாதம் கிடையாது. ஆனால் அதிகாலை 2:50 மணி அளவில் நேர்த்தியாக வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை டிராகன் விண்கலம் இழந்தது. பயப்பட வேண்டாம். இது வழக்கமான நடைமுறை தான். வளி மண்டலத்துக்குள் நுழையும் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 7 நிமிடம் தொடர்பு துண்டிக்கப்படும். டிராகன் வெற்றிகரமாக வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. மீண்டும் தொடர்பு வழங்கப்பட்டது. கடைசி சவால் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்குவது. இதற்கு ஸ்பிளாஸ் டவுன் முறை என்று பெயர். மின்னல் வேகத்தில் வரும் விண்கலத்தை அப்படியே விட்டால் கீழே மோதி வெடித்து விடும். இதை தடுக்க விண்கலத்தில் இருந்து முதல் பாராசூட், 18,000 மீட்டர் உயரத்தில் விரிந்தது. உடனே டிராகன் விண்கலன் வேகம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகமாக குறைந்தது. அடுத்த சில நொடிகளில் 2வது பாராசூட் விரிந்தது. உடனே விண்கலன் வேகம் மணிக்கு 24 கிலோ மீட்டராக குறைந்தது. திட்டமிட்டபடி புளோரிடா கடற்கரை பகுதியில் தொப்பென்று விழுந்தது டிராகன் விண்கலம். சுற்றி கடல் நீர் தெறித்தது. விண்கலன் மிதப்பதற்கு தேவையான எல்லா அம்சமும் உண்டு. எனவே தான் கடலில் விழுந்ததும் டிரான் விண்கலம் மிதக்க ஆரம்பித்தது. கடைசி அபாய கட்டமான ஸ்பிளாஸ்டவுன் முறையும் வெற்றிகரமாக முடிந்தது. ஏற்கனவே தயார் நிலையில் நின்ற மீட்பு கப்பலில் இருந்து மீட்பு படையினர் இறங்கி 4 விண்வெளி வீரர்களையும் மீட்டு வந்தனர். உலகமே மகிழ்ச்சியில் கொண்டாட ஆரம்பித்தது. ஆளுக்கு முன் டால்பின்கள் வந்து வெல்கம் சுனிதா என்றன. எல்லா திக் திக் கட்டங்களையும் வென்று இப்படி தான் சாதித்து இருக்கிறது ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை