காயமடைந்த ஏட்டுவிடம் நலம் விசாரித்த டிஐஜி, எஸ்பிக்கள்
மதுரை உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார். இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்துபட்டி டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். நாவர்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணனுக்கும், முத்துகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில், முத்துக்குமார் அடித்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. தலைமறைவான பொன்வண்ணனை போலீசார் தேடி வந்தனர். தேனி மாவட்டம் கம்பம் மெட்டு செல்லும் வழியில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பொன்வண்ணன் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக தெரிகிறது. போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குண்டு அடிப்பட்டு சுருண்டு விழுந்த பொன்வண்ணனை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் நுழைவாயில் மூடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.