திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்: கும்பாபிஷேகத்தால் குளிர்ந்த குமரன் | Thiruparankundram | Temple
முருகா கோஷத்தால் அதிர்ந்த மதுரை திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2.37 கோடியில் திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து. கும்பாபிஷேகத்துக்காக ஜூலை 10ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று மாலை 7ம் கால பூஜை நடந்ததை தொடர்ந்து இரவு மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசை முடிந்து, விக்னேஸ்வர பூஜை, அதிகாலை 3:45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து அதிகாலை 4:30 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர் அடங்கிய தங்க, வெள்ளிக் குடங்கள் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. காலை 5.30க்கு ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் மூலவர்களை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக திருப்பரங்குன்றம் கோயிலில் மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று மதியம் நடை அடைப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். கும்பாபிஷேகத்தின் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கோயிலுக்குள் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி சென்று திரும்ப இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை நகர் எங்கும் இருந்து காண 26 இடங்களில் மெகா எல்.இ.டி., டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. பத்து ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்புக்காக மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பத்து இடங்களில் முதலுதவி மையங்கள், நடமாடும் கழிப்பறைகள், கிரிவல ரோடு உட்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.