தூத்துக்குடியை பதற வைத்த தாய், மகள் இரட்டை சம்பவம்! | Thoothukudi | Crime | Investigation
2 நாளாக காட்டில் பதுங்கல் காட்டி கொடுத்த சகோதரி! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்தது போலீஸ்! தூத்துக்குடி எட்டயபுரம் அருகே உள்ளது மேலநம்பிபுரம் கிராமம். இங்கு கணவனை இழந்த சீதாலட்சுமி வயது 75, தனது மகள் 45 வயது ராமஜெயந்தியுடன் வசித்து வந்தார். ராமஜெயந்தி கணவனை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் 3ம் தேதி இவர்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் இருவரையும் கொடூரமாக கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது. 13 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. எட்டயபுரம் போலீசார் தடயங்களை கைப்பற்றி குற்றவாளிகளை தேடினர். சந்தேகத்தின் பேரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் வயது 18 மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் வயது 25 ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதும், கஞ்சா போதையில் கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்தது. வேல்முருகன், முகேஷ் கண்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது தப்பியோடி உள்ளனர். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளி மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் வயது 25 என்பது தெரிந்தது. தலைமறைவான அவனை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அயன் வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடினர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாருக்கு தண்ணி காட்டிய முனீஸ்வரன் நேற்று இரவு அயன் வடமலாபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். முனீஸ்வரன் வந்ததாக தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த முனீஸ்வரன் கடும் பசியால் சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு போட்டு கதவை அடைத்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்த சூழலில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்ற போது இன்று காலை முனீஸ்வரன் குளத்தூர் எஸ்ஐ முத்துராஜ் மற்றும் மூன்று போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தப்பி ஓடிய முனீஸ்வரனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சுடப்பட்ட முனீஸ்வரன், காயம் பட்ட எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.