அடுத்தடுத்து சஸ்பெண்டாகும் ரயில்வே ஊழியர்கள்: நடந்தது என்ன? | Train | Madurai Train | Tamil sangama
திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் செல்லும் பாசஞ்சர் ரயில், கடந்த ஜூன் 26ம் தேதி கோவில்பட்டி-கடம்பூர் இடையே சிக்னல் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது வாரணாசி-கன்னியாகுமரி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் அதன் பின்னால் வந்துள்ளது. குறைவான தூர இடைவெளியில் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மதுரை ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி அந்த வழிதடத்தில் மின் இணைப்பை துண்டித்தார். இதனால் இரு ரயில்களும் அடுத்தடுத்து நின்றன. பெரிய அசம்பாவிதம் நடப்பது தடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தினர். கவனக்குறைவாக செயல்பட்ட 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள், ஒரு கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேலும் 20 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், கோட்ட அளவில் உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மின்சார ரயில் பாதைக்கான கட்டுப்பாட்டு அறை மதுரையில் இருந்ததால், மின் இணைப்பு விரைவாக துண்டிக்கப்பட்டு விபத்து தடுக்கப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை என்றால் தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் வேகத்தை குறைக்காமல் பாசஞ்சர் ரயிலை நோக்கி சென்று இருக்கும். ரயில் டிரைவரின் சாமர்த்தியத்தை பொறுத்து சூழல் வேறுவிதமாக போயிருக்கும் என தெரிவித்தனர்.