ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர் தோட்டம் திறப்பு Tulip Garden Opened| Kashmir | JK Tourism| Summer
நாடு முழுதும் கோடை காலம் துவங்கிய நிலையில் ஜம்மு - காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பனி படர்ந்த மலைகள், ஜில்லென்று வீசும் காற்றோடு சேர்ந்து பொழியும் பனி மழையை ரசிக்க காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளை, பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் துலிப் மலர்களும் வரவேற்க தயாராகி உள்ளன. ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர் தோட்டம், சுற்றுலா பயணிகளுக்காக புதனன்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டு 74 வகைகளை சேர்ந்த லட்சக்கணக்கான துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயில், ஸ்ரீநகரின் தால் ஏரியை ரசிப்பதுடன், இந்த சம்மர் சீசனில் கூடுதலாக துலிப் மலர் தோட்டத்தையும் சுற்றிப் பார்க்கலாம். சம்மர் சீசனில் சில வாரங்களுக்கு மட்டுமே இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும் என்பதால், துலிப் மலர்களை காண லட்சக்கணக்கானோர் காஷ்மீர் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், காஷ்மீரில் சம்மர் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.