திமுக அரசின் நத்தை வேகம் பொருளாதார வளர்ச்சிக்கு தடை annamalai| mk stalin| tuticorin railway project
சென்னை ஐசிஎப் ஆலையில் அம்ரித் பாரத் 2.o ரயிலுக்கான பிரத்யேக கோச்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை வேண்டாம் என்று தமிழக அரசு கடிதம் எழுதியதால் அந்த திட்டம் கைவிட்டுள்ளது எனக்கூறினார். புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனக்கூறிய அமைச்சர், தமிழகத்திற்காக ரயில்வே கெண்டுவரும் திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தமிழக அரசின் இந்த அணுகுமுறையை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்து உள்ளார். பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார். ஆனால், இங்குள்ள திமுக அரசு தமிழகத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறது. தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26 சதவீத நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை - -தூத்துக்குடி ரயில் பாதை அமைக்க சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேக செயல்பாடு, அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறியுள்ளது. புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து அருப்புகோட்டையில், வரும் 20ம் தேதி பாஜ சார்பில் போராட்டம் நடைபெறும் என அண்ணாமைலை கூறியுள்ளார்.