நம்மை மதிக்காதவர்கள் நமக்கு தேவையில்லை: சசிதரூர் தடாலடி shashi tharoor| trump| US president| modi| U
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியை, 50 சதவீதமாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 21 நாட்களில் அது அமலுக்கு வர உள்ளது. வரி உயர்வால், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும்.
அதிபர் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பதால், இந்திய பொருட்களை அமெரிக்கர்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறினார்.
அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கும். ஏனென்றால், 90 பில்லியல் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்கிறோம்.
நமது போட்டியாளர்களான வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளுக்கு நம்மை விட குறைந்த வரி விதிக்கப்படுவதால், இந்திய சந்தை அவர்கள் கைக்கு செல்லும்.
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி பாதிக்கும் என்பதால், இப்போதே வேறு நாடுகளுக்கு திருப்பி விடுவதற்கான வழிகளை செய்ய வேண்டும்.
நம்மை விட சீனாதான் ரஷ்யாவிடம் இருந்து இரண்டு மடங்கு கச்சா எண்ணெய் வாங்குகிறது. அவர்களுக்கான வரி விதிப்புக்கு 90 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 21 நாட்களே தரப்பட்டுள்ளது. இதிலிருந்து அமெரிக்கா மறைமுகமாக ஏதோ செய்தி சொல்கிறது. இந்த விவகாரத்தில் அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்.
50 சதவீத வரி விதித்த அமெரிக்காவை, அவர்கள் பாணியிலேயே திருப்பி அடிக்க வேண்டும். அமெரிக்க பொருட்களுக்கு சராசரியாக இந்தியா 17 சதவீத வரி விதிக்கிறது. அதை 50 சதவீதம் ஆக்க வேண்டும்.
அவர்கள் நம்முடைய உறவை மதிக்கவில்லையா என்று நாம் கேட்க வேண்டும். அவர்களுக்கு இந்தியா முக்கியமில்லை என்றால், நமக்கும் அமெரிக்கா முக்கியமில்லைதான் என்று எம்பி சசிதரூர் கூறினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், அந்நாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், வாகன உதிரி பாகங்கள், கடல் உணவுகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும்.
ஐபோன்கள் உள்ளிட்ட மின்னணு சாதானங்கள், மருந்து பொருட்கள், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.