ஈரானை அழிக்க அஸ்திரம் எடுத்த அமெரிக்கா US vs Iran war | Trump vs khamenei | diego garcia | b2 bomber
அமெரிக்கா-ஈரான் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் அபாயம் தொற்றி இருக்கிறது. ஈரானை குண்டு வீசி தகர்க்க இந்தியாவுக்கு மிகவும் பக்கத்தில் இருக்கும் ஒரு தீவில் அமெரிக்கா தனது அரக்கத்தனமான போர் விமானங்களை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவின் முகாம்களை தகர்க்க ஈரான் ஏவுகணைகளை வரிசையாக நிலை நிறுத்தி வருகிறது. ஈரானில் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டுகிறார். அமெரிக்காவின் ராணுவ முகாம்களை தடம் தெரியாமல் அழிப்போம் என்று ஆக்ரோஷம் காட்டுகிறது ஈரான். இந்த கணம் முதல் எந்த நேரமும் உலகை உலுக்கும் மிகப்பெரிய போர் வெடிக்கலாம். இவ்வளவு பதற்றத்துக்கும் என்ன காரணம்? அமெரிக்காவும்-ஈரானும் மல்லுக்கட்டுவது ஏன்? ஈரானை சின்னாப்பின்னமாக சிதறடிக்க இந்தியாவுக்கு பக்கத்தில் அமெரிக்கா ஸ்கெட்ச் போட்டிருப்பது ஏன்? ஒருவேளை ஈரானும்-அமெரிக்காவும் போரில் குதித்தால் அடுத்து என்ன நடக்கும்? இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு வருமா? என்பதை எல்லாம் விரிவாக பார்க்கலாம். இவ்வளவு பஞ்சாயத்துக்கும் முழு முதல் காரணம் அணு ஆயுதம். உலக நாடுகளை பொறுத்தவரை, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் தான் அணு ஆயுதங்கள் உள்ளன. இப்போதைக்கு ஈரானிடம் ஒரு அணு ஆயுதம் கூட கிடையாது. ஆனால் அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க தீவிரம் காட்டி வருகிறது. அணு ஆயுதம் தயாரிக்க தேவைப்படும் முக்கிய பொருள் செறிவூட்டப்பட்ட யுரேனியம். இப்போது ஒரு அணு ஆயுதம் தயாரிக்க தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் 90 சதவீதத்தை ஈரான் தயாரித்து விட்டது என்று ஆய்வுகள் சொல்லி வருகின்றன. இது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம், 1968ல் ஐநா மேற்பார்வையில் கொண்டு வரப்பட்ட அணு பரவல் தடுப்பு ஒப்பந்தம். இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கியமான 5 நாடுகள் தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மற்றபடி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்பட 186 நாடுகள் கையெழுத்திட்டன. அதில் ஈரானும் ஒன்று. இந்த ஒப்பந்தப்படி கையெழுத்திட்ட நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்கவோ, வாங்கவோ, யாருக்கும் கொடுக்கவோ அனுமதி கிடையாது. ஆனால் இதை மீறி ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து ஈரானுடன் அமெரிக்கா தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டது. பின்னர் அதில் இருந்து டிரம்பின் முதல் ஆட்சியின் போது அமெரிக்கா விலகியது. இது தான் சான்ஸ் என்று கருதி, அதன் பிறகு அணு ஆயுதம் தயாரிப்பை ஈரான் அசுர வேகத்தில் முன்னெடுக்க துவங்கியது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது தங்களுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட தங்கள் கூட்டாளிகளுக்கும் ஆபத்தாக இருக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. இன்னொரு விஷயம் உலகின் பெரிய அண்ணன் நாங்கள் தான் என்று அமெரிக்கா கருதுவதால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியை முறியடிக்கும் தார்மீக கடமை தங்களுக்கு இருப்பதாக அந்த நாடு நினைக்கிறது. எனவே தான் ஈரான் எந்த காரணம் கொண்டும் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்றும், இதை உறுதி செய்யும் வகையில் தங்களுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட அடிபணியவில்லை ஈரான். தொடர்ந்து ஈரானை மிரட்டி வந்த டிரம்ப், சில வாரங்களுக்கு முன்பு இந்த விவகாரத்தை சற்று சாஃப்டாக டீல் செய்தார். ஈரானை சமாதானம் செய்யும் முயற்சியாக, அந்நாட்டின் உச்ச தலைவர் கமெனிக்கு பரபரப்பான கடிதம் எழுதினார். ‛ஈரானுடன் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறோம். இதற்காக ஈரான் உச்ச தலைவர் கமெனிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அவர் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன். எந்த காரணம் கொண்டும் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது. அவர்கள் யாரும் இறக்க கூடாது. அமெரிக்கா பேச்சை கேட்டு ஈரான் ஒப்பந்தம் போட முன்வந்தால், இஸ்ரேல் அவர்கள் மீது குண்டு வீசாது. ஈரானை எப்படி தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் நினைக்கிறதோ, அதை செய்யாமல் நிறுத்தி வைத்து விடும் என்று டிரம்ப் சொன்னார். ஆனால் அப்போதும் ஈரான் முரண்டு பிடித்தது. டிரம்ப் பேட்டிக்கு பதில் அளித்த உச்ச தலைவர் கமெனி, டிரம்ப் பரிந்துரை மரியாதைகுரியதாக இல்லை. ஈரானை யாராலும் பணிய வைக்க முடியாது. நாங்கள் அச்சுறுத்தலுக்கு பணியமாட்டோம் என்று அதிரடி காட்டினார். இதே கருத்தை தான் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் கூறினார். ‛அழுத்தம் கொடுத்து ஈரானை பணிய வைக்கும் அமெரிக்காவின் கொள்கை ஒரு நாளும் எங்களிடம் வேலை செய்யாது. இப்படி அழுத்தம் தந்தவர்கள் எல்லாம் எங்களிடம் தோற்றுப்போய்விட்டார்கள் என்றார். ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்தார். ‛அமெரிக்காவுடன் எந்த பேச்சுக்கும் வரமாட்டோம். என்ன பண்ண முடியுமோ பண்ணிப்பாருங்கள் என்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தார். இப்படி மொத்த ஈரானும் அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்து நிற்பதை டிரம்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஈரானுடன் போட்டு பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். எனவே தான் சில நாட்களாகவே ஆப்ரேஷனுக்கு தேவையான முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார். முதல் வேலையாக ஈரானை எங்கிருந்து அடிக்கலாம் என்பது பற்றி அமெரிக்கா யோசித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் உள்ளன. அங்கு ஏற்கனவே போர் விமானங்கள், போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஈரானை அடிக்க புதிய இடத்தை அமெரிக்கா தேர்வு செய்தது. அதுதான் டியாகோ கார்சியா தீவு Diego Garcia. இது இந்திய பெருங்கடலில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தீவு பகுதி. இந்த இடத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் ராணுவ பயிற்சிக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்த குட்டி தீவில் விமான படை தளமும் உள்ளது. இங்கு தான் இப்போது சக்தி வாய்ந்த போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. இந்த இடம் ஈரானை விட இந்தியாவுக்கு தான் பக்கம். நம் கன்னியாகுமரியில் இருந்து சரியாக 1,821 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதாவது மாலத்தீவுகளுக்கு தெற்கில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து 3,841 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரான் அமைந்துள்ளது. டியாகோ கார்சியாவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி, ஈரானை வேட்டையாட வேண்டும் என்பது அமெரிக்காவின் பிளான். இந்த தீவில் அமெரிக்கா குவித்து வருவது B-2 Spirit என்னும் ரக போர் விமானங்கள். இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இதனால் 18,000 கிலோ வெடிகுண்டுகளை தூக்கி சென்று இலக்கை இருந்த தடம் தெரியாமல் அழிக்க முடியும். குறிப்பாக சாதாரண குண்டுகள் மட்டும் இன்றி அணு ஆயுதங்களையும் சுமந்து சென்று தாக்க முடியும். இலக்கை துல்லியமாக குறி வைத்து தாக்கும் guided ரக குண்டுகளையும் இந்த போர் விமானங்களை வைத்து வீசலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பூமிக்கு அடியில் இருக்கும் இலக்குகளை கூட துல்லியமாக தகர்க்கும் குண்டுகளையும் பி-2 போர் விமானத்தால் வீச முடியும். இது தான் இந்த போர் விமானத்தை அமெரிக்கா தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஏனென்றால் சமீபத்தில் தான் அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஏவுகணை சிட்டியை ஈரான் அறிமுகம் செய்தது. அங்கு சக்தி வாய்ந்த பல ரக ஏவுகணைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. பூமிக்கு அடியில் அந்த ஏவுகணை சிட்டி இருப்பதாக ஈரான் சொன்னது. அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இந்நேரம் அமெரிக்கா மோப்பம் பிடித்து இருக்க கூடும். பூமிக்கு அடியில் இருக்கும் அந்த ஏவுகணை நகரத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு பி-2 போர் விமானம் கைகொடுக்கும். எனவே தான் அதை அமெரிக்கா தேர்வு செய்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே போல் பி-2வை தேர்வு செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்த போர் விமானத்தால் இடை நிற்காமல் நீண்ட தூரம் பறக்க முடியும். குறிப்பாக 11,112 கிலோ மீட்டர் தூரம் பறக்கலாம். டியாகோ கார்சியா தீவில் இருந்து ஈரான் 3,841 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. உள்ளே புகுந்து தாக்கி விட்டு மீண்டும் பத்திரமாக திரும்பி வர பி-2 போர் விமானங்கள் தான் ஏற்றவை. இடையில் எரிபொருள் நிரப்பினால் இன்னும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்க முடியும். எனவே ஈரான் ஆப்ரேஷனுக்கு பி-2 தான் பெட்டர் ஆப்ஷன் என்று அமெரிக்கா கருதுகிறது. ஒரு பக்கம் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா, நேற்று கடைசி வார்னிங்கை ஈரானுக்கு விடுத்தது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அணு ஆயுத விவகாரத்தில் எங்களுடன் ஒப்பந்தம் போட ஈரான் முன்வர வேண்டும். இல்லை என்றால் ஈரானில் குண்டு மழை பொழிவோம். குண்டு வீசுவோம் என்றால் சாதாரணமாக கிடையாது. தனது வரலாற்றிலேயே இப்படியொரு குண்டு வீச்சை ஈரான் பார்த்திருக்காது என்று சொல்லும் வகையில் அமெரிக்காவின் அட்டாக் இருக்கும். அதோடு நிற்கமாட்டோம். ஏற்கனவே இருக்கும் பொருளாதார தடைகளுடன் சேர்த்து மேலும் மேலும் பல தடைகளை போடுவோம். மொத்த உலகத்தில் இருந்தே ஈரானை தனிமைப்படுத்தி விடுவோம் என்று டிரம்ப் மிரட்டினார். அந்த மிரட்டலுக்கு இன்று சுடச்சுட ஈரான் பதிலடி கொடுத்தது. எங்கள் மேல் கை வைத்தால் அமெரிக்காவை சும்மா விடமாட்டோம். அமெரிக்காவுக்கு உதவும் பிரிட்டன், துருக்கி ராணுவ தளங்களையும் தாக்குவோம் என்று ஈரான் கூறி உள்ளது. குறிப்பாக ஈரான் போர் விமானங்களை குவித்து வரும் டியாகோ கார்சியா தீவை தாக்க ஈரான் தயாராகி வருகிறது. அமெரிக்கா அங்கு போர் விமானங்களை குவித்த நிலையில், அந்த தீவை குறி வைத்து ஈரான் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வரிசையாக நிலை நிறுத்தி இருக்கிறது. அதே போல் எக்கச்சக்கமான ட்ரோன்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. குறிப்பாக சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய suicide ட்ரோன்களையும் தயாராக வைத்துள்ளது. பொதுவாக ட்ரோன்கள் வெடிகுண்டுகளை சுமந்து சென்று இலக்குகளை தாக்கி விட்டு திரும்ப வந்து விடும். ஆனால் சூசைட் ட்ரோன்கள் அப்படி அல்ல. சக்தி வாய்ந்த குண்டுகளை சுமந்து சென்று, இலக்கில் மோதி வெடிக்க செய்யும். இது ட்ரோன் வீசும் வெடிகுண்டு தாக்குதலை விட மிககொடியதாக இருக்கும். பேரிழப்புகளை ஏற்படுத்தும். இப்படி ஈரானும், அமெரிக்காவும் வரிந்து கட்டி நிற்பதால் தான் எந்த கணமும் போர் அபாயம் நிலவி வருகிறது. ஒருவேளை டியாகோ கார்சியா தீவில் இருந்து ஈரானை அமெரிக்கா தாக்கினாலோ அல்லது ஈரான் டியாகோ கார்சியா தீவை குறி வைத்து ஈரான் தாக்கினாலோ, போர் விமானங்களும், ட்ரோன், ஏவுகணைகளும் இந்தியா மற்றும் சவுதிக்கு இடையே தான் பறந்து சென்று தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவுக்கோ, சவுதிக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள கடல் பரப்பு வழியாக தான் சண்டை நடக்கும் என்பது கவனிக்க வேண்டியது. உண்மையிலேயே ஈரான், அமெரிக்கா போர் வெடித்தால் அது ஈரானுக்கு தான் இழப்பை ஏற்படுத்தும். ஈரானுக்கு, அமெரிக்காவும் சீனாவும் ஆதரவுக்கு வரலாம். நேரடியாக சண்டை செய்ய வாய்ப்பு குறைவு தான். மாறாக சண்டையை நிறுத்தும்படி அமெரிக்காவை வற்புறுத்தக்கூடும். ஆனால் அமெரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரேல் 100 சதவீதம் களமிறங்கும். ஈரானின் ஆணு உற்பத்தி மையங்கள் எங்கே எல்லாம் இருக்கிறது என்பது இஸ்ரேலுக்கு அத்துப்படி. எப்படியாவது அவற்றை அழிக்க வேண்டும் என்பது இஸ்ரேலின் விருப்பமும் கூட. ஆனால் போன முறை 100 போர் விமானங்களை அனுப்பி ஈரானை வேட்டையாடியபோது, அதன் அணு உற்பத்தி மையங்களை இஸ்ரேல் குறி வைக்கவில்லை. காரணம், அதற்கு பைடன் அரசாங்கம் க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை. ஆனால் டிரம்ப் அப்படி அல்ல. இஸ்ரேலை ஒரு பேக்அப் போல வைத்துள்ளார். எந்த கணம் தேவை என்றாலும் இஸ்ரேலுக்கு க்ரீன் சிக்னல் காட்டி விடுவார். ஹெஸ்புலா, ஹமாஸ், ஹவுதிகளை வைத்து ஆட்டம் போடும் ஈரான் கொட்டத்தை அடக்கியே தீருவோம் என்று ஏற்கனவே இஸ்ரேல் ஒற்றைக்காலில் நிற்கிறது. டிரம்ப் ஓகே சொன்னால் கொஞ்சம் கூட தயங்காமல் ஈரானில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். எனவே ஈரான் பல முனை தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஈரானும் சண்டையில் சளைத்தது அல்ல. குறிப்பாக அதன் ஏவுகணை சக்தி பிரமிக்க வைக்கும். குவியல் குவியலாக ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் தயக்கம் இன்றி ஈரான் பதிலடி கொடுக்கும். ஏற்கனவே இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் கொடுக்க வேண்டிய பாக்கி இருக்கிறது. அதாவது ஈரான் ஏவுகணை அட்டாக்குக்கு பதிலடி கொடுக்க கடந்த அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் 100 பேர் விமானங்களை அனுப்பி ஈரானில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. கனவில் கூட கற்பனை செய்ய முடியாத பதிலடியை இஸ்ரேலுக்கு கொடுப்போம் என்று ஈரான் அறிவித்தது. ஆனால் 5 மாதம் மேல் ஆகியும் அந்த தாக்குதல் நடக்கவில்லை. இன்னொரு பக்கம் ஈரானின் முக்கிய படை தளபதியை டிரம்ப் தனது முதல் ஆட்சி காலத்தில் போட்டுத்தள்ளினார். அதற்கும் ஈரான் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. இந்த சண்டையை பயன்படுத்தி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம். என்ன தான் ஈரான் சண்டை செய்தாலும் அதனால் அமெரிக்காவை அடிக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.