உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வைகுண்ட ஏகாதசியால் விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் | Vaikunda ekadashi festival | Srirangam temple |

வைகுண்ட ஏகாதசியால் விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் | Vaikunda ekadashi festival | Srirangam temple |

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான ஸ்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடங்கியது. பகல்பத்து முதல் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின பாண்டியன் கொண்டை, வைர பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துமாலை, பவளமாலை, காசுமாலை, அடுக்கு பதக்கம், வைர ஒட்டியானம், வைர நெற்றிப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்ட நம்பெருமாள், அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார். அங்கு எழுந்தருளிய நம்பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு மீண்டும் மூலஸ்தானம் அடைவார். பகல்பத்து வைபவத்தின் 10ம் நாளான ஜனவரி 9ல் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதன் பின் இராப்பத்து வைபவத்தின் முதல் நாளான ஜனவரி 10-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார். தொடர்ந்து ஜனவரி 16ம் தேதி கைத்தல சேவையும், 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடக்கும். அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார். ஜனவரி 19ல் தீர்த்த வாரியும், 20ல் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா முடியும்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை