சர்வதேச ஆய்வு மைய கட்டுமான பணி மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் தடை Vallalar| centre| works| supreme court
கடலூர் மாவட்டம், வடலூரில் 1872ல் வள்ளலார் ராமலிங்கம் சுவாமிகள் சத்திய ஞானசபயை நிறுவினார். அங்கு வள்ளலார் கருத்துகளை பரப்ப வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசாணை வெளியிடப்பட்டு 99 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள பெருவெளியில் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கின. அருட்பெருஞ்ஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் கூடும் பெருவெளி இடத்தில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க வள்ளலார் சன்மார்க்க அன்பர்களும், பெருவெளிக்கு இடம் கொடுத்த பார்வதிபுரம் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ, பாமக உள்பட அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. பாஜவின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த வினோத் ராகவேந்திரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பெருவெளியில் எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் தமிழக அரசு பெருவெளிக்கு அருகில் சர்வதேச ஆய்வு மையம் தொடர்பான மற்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. அதை எதிர்த்து வினோத் ராகவேந்திரா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த கோர்ட், எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வள்ளல் பெருமானின் பக்தர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்திருப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களின் வழிபாட்டு முறையை சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு சம்மட்டி அடியாக இது அமைந்துள்ளது. திமுக அரசு பக்தர்களை மேலும் காயப்படுத்தாமல் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச ஆய்வு மைய கட்டுமான பணிகள் மேற்கொள்வதை கைவிட வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.