H1B விசா கட்டணத்தில் திடீர் விலக்கு: ஒயிட் ஹவுஸ் முக்கிய தகவல் h-1b visa fee hike | the white house
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்து வேலை பார்க்க அந்த நாடு வழங்கி வரும் H-1B விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 88 லட்சம் ரூபாய். இதற்கு முந்தைய கட்டணம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவு தான். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா வழங்கும் H-1B விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்கள் தான் பெறுகின்றனர் என்பதால் இந்த செய்தி இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புதிய விசா கட்டணம் இந்திய நேரப்படி செப்டம்பர் 21 காலை 9:30 மணிக்கு நடைமுறைக்கு வந்தது. அதன்படி, புதிய விசாவுக்கு 88 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் செயல்படும் டெக் கம்பெனிகளில் இந்திய ஊழியர்கள் தான் நிரம்பி வழிகின்றனர். மருத்துவமனைகளிலும் எச்1பி விசா மூலம் ஏராளமான டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். எச்1பி விசாவை அதிகபட்சம் 6 ஆண்டுக்கு நீட்டிக்கலாம். அதன் பிறகு மீண்டும் புதிதாக விண்ணப்பித்து பெற வேண்டும். அப்போது புதிய கட்டணத்தை செலுத்த நேரிடும். இந்த விசா கட்டணத்தை எல்லாம் சம்மந்தப்பட்டவரை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க கம்பெனிகள் தான் செலுத்த வேண்டும் என்பதால், அவர்கள் இந்தியர்களையோ அல்லது வேறு வெளிநாட்டினரையோ வேலைக்கு எடுக்க தயங்குவார்கள். அதற்கு பதில் அமெரிக்கர்களையே வேலைக்கு வைக்க வேண்டிய நிலை வரும். இதற்காக தான் இப்படியொரு உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார்.