இதயமே பதறும் வயநாடு ஸ்ருதியின் நிஜ கதை wayanad landslide | Shruti Jenson news | wayanad shruti story
ஒன்றரை மாதம் உருண்டோடி விட்டது. உலகை உலுக்கிய வயநாடு சோகம் இன்னும் நீங்கவில்லை. நள்ளிரவுக்கும் அதிகாலை விடியலுக்குள் உள்ள இடைவெளி தான்; உலக வரைபடத்தில் உருமாறி இருந்தது வயநாடு மாவட்டம். முதல் நிலச்சரிவில் முண்டக்கை என்ற ஊர் இருந்த தடம் தெரியாமல் அழிந்தது. அடுத்தடுத்து மேலும் 2 நிலச்சரிவு வந்து, சூரல்மலை, அட்டமலையின் பாதியை அள்ளி சென்றது. கொத்து கொத்தாய் மரணங்கள். இன்னும் 100 பேர் கதி என்னவென்றே தெரியவில்லை. பல நூறு பேர் வீடு, உடமை, உறவுகள் என ஒரே இரவில் மொத்தத்தையும் தொலைத்து நிர்கதியாய் நின்றனர். அப்படி அம்மா, அப்பா, உடன் பிறந்தவள் என ஒரே இரவில் ரத்த பந்தம் 9 பேரை இழந்து தனி மரமாய் நின்றவர் 24 வயது இளம்பெண் ஸ்ருதி. அவருக்கு இருந்த ஒரே ஆதரவு காதலனும், இரு வீட்டு பெற்றோராலும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவருமான ஜென்சன் தான். அவரது உயிரையும் இப்போது அபகரித்து விட்டான் காலன். தனது கடைசி உறவையும் இழந்த ஸ்ருதியின் சோக கதை தான் மொத்த கேரளாவையும் இப்போது உலுக்கிக்கொண்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய சோகம் ஸ்ருதிக்கு எப்படி நேர்ந்தது என்பதை பார்க்கலாம்.