பெண் போலீசுக்கு சோக முடிவு:கிருஷ்ணகிரி போலீசார் அதிர்ச்சி woman police dies road accident
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ரமாமணி வயது 40. ஊத்தங்கரையில் நேற்று நடந்த போலீஸ் பயிற்சி அணிவகுப்பில் பங்கேற்றார். பிறகு, ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் போலீஸ் நிலையத்துக்கு ஸ்கூட்டியில் புறப்பட்டார். மத்தூர் அருகே கலைமகள் கலாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்றபோது வலதுபுறமாக வண்டியை திருப்பினார். எதிரே வேகமாக வந்த பைக்கை கவனிக்க தவறி விட்டார். அதிவேகத்தில் வந்த பைக், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் ரமாமணி படுகாயமடைந்தார். பைக்கை ஓட்டி வந்த இளைஞரும் படுகாயமடைந்தார். அவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். விடுப்பில், சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமாமணியின் நிலைமை மோசமாக இருந்ததால் கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.