கபில் வீட்டில் நடந்தது என்ன? யோகராஜ் சிங் பேட்டி yograj singh kapil dev indian cricket team sunil G
இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங். இவரும் இந்திய அணிக்காக 1980களில் ஒரு டெஸ்ட் போட்டி, ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். பஞ்சாபை சேர்ந்த யோகராஜ் சிங் கூறியதாவது: கபில் தேவ் இந்திய அணி, வடக்கு மண்டலம் மற்றும் ஹரியானா அணி என 3 அணிக்கும் கேப்டனாக இருந்தபோது எந்த காரணமும் இல்லாமல் என்னை அணியில் இருந்து நீக்கினார். என்னை நீக்கியது பற்றி கபில்தேவிடம் என் மனைவி பல கேள்விகளை கேட்க நினைத்திருந்தார். நீ பொறுமையாக இரு; நான் கபிலுக்கு பாடம் கற்பிப்பேன் என மனைவியை சமாதானப்படுத்தினேன். கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சண்டிகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். கபில்தேவ் தன் தாயாருடன் வீட்டுக்கு வெளியே வந்தார். அவரை கடுமையாக திட்டித் தீர்த்தேன். நீங்கள் செய்த செயலுக்கான பலனை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்றேன். உங்கள் தலையில் சுட வேண்டும் என்றுதான் ஆவேசத்துடன் வந்தேன். உங்கள் பக்கத்தில் மரியாதைக்குரிய தாயார் இருக்கிறார். அதனால் சுடாமல் விடுகிறேன் என கூறி விட்டு வீட்டுக்கு வந்தேன். அந்த தருணத்தில் தான் இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என முடிவெடுத்தேன். யுவராஜ் கிரிக்கெட் விளையாடுவான் எனவும் அப்போதுதான் தீர்மானித்தேன். 2011ல் இந்திய அணி உலகக்கோப்பை வென்றபோது இந்தியாவே மகிழ்ச்சியில் திளைத்தது. கபில்தேவ் மட்டும் கண்ணீர் வடித்தார். அவருக்கு ஒரு பேப்பர் கட்டிங்கை அனுப்பினேன். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உங்களை விட என் மகன் பெரிய சாதனை படைத்து விட்டான் என்றேன்.