அவங்க கேட்டது தூத்துக்குடி; அமைச்சர் நினைத்தது தனுஷ்கோடி | Southern Railway | Ashwini Vaishnaw
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையை கடந்த 10ம் தேதி பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார். மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த அமைச்சர், அந்த திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கடிதம் எழுதியதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக பதில் அளித்தார். அமைச்சர் சொன்ன விஷயம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்தை வேண்டாம் எனக்கூறியதாக தமிழக அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. போராட்டமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடி- மதுரை ரயில்வே திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு கூறவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் சொன்னார். இச்சூழலில், மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அன்று அமைச்சர் பேட்டி அளித்தபோது, ஒரே நேரத்தில் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். ரயில்வே பணிமனையில் இரைச்சலாகவும் இருந்தது. மதுரை - தூத்துக்குடி திட்டம் பற்றி கேட்கப்பட்டபோது, தனுஷ்கோடி ரயில் திட்டம் என நினைத்து அமைச்சர் அதற்கான பதில் அளித்தார். நிலம் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக தனுஷ்கோடி ரயில் திட்டத்தை தான் கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. அமைச்சர் சொன்ன பதில் மதுரை- தூத்துக்குடி ரயில் திட்டத்திற்கானது என தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது. அந்த திட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.