உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவுக்கு நிபந்தனை போடும் விசிக! 2026 Election | DMK Alliance | VCK | Congress

திமுகவுக்கு நிபந்தனை போடும் விசிக! 2026 Election | DMK Alliance | VCK | Congress

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் பாஜ அங்கம் வகிக்கிறது. தவெக முதல்வர் வேட்பாளராக விஜயை அறிவித்து களம் காண்கிறது. நாதக வழக்கம்போல தனித்து போட்டி என அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேமுதிக, பாமக கட்சிகள் யார் பக்கம் சாயும் என்பது தமிழக அரசியல் களத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், பாமகவும் வர வேண்டும். இவ்விரு கட்சிகளும் ஏற்கனவே ஒரே கூட்டணியில் இருந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு, காங்கிரசை விமர்சித்து, தனியார் டிவி நேர்காணலில் பேசிய வீடியோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதில், வன்னி அரசு கூறியிருப்பதாவது ; திமுக கூட்டணியில், திமுகவுக்கு அடுத்து விசிக தான் வலிமையான கட்சி. அதனால், எங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கும்படி கேட்கிறோம். இப்படி கேட்பது என் போன்றோரின் விருப்பம். இதனால், கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை. தமிழகத்தில் வலுவான கட்சி குறித்த கணக்கெடுப்பை நடத்துங்கள். எந்த கட்சி வலிமையான கட்சி என்று கேளுங்கள். காங்கிரசுக்கு தமிழகத்தில் என்ன இருக்கிறது? அகில இந்திய அளவில் ராகுல் தலைவராக, பாஜவுக்கு மாற்றாக இருக்கிறார். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நாங்கள் வலிமையாக இருக்கிறோம். காங்கிரசை விட எங்களுக்கு கூடுதல் இடங்களை கொடுங்கள். பா.ம.க., - வி.சி.க., ஒரே கூட்டணியில் சேர வேண்டும் என்பதை கூற, செல்வப்பெருந்தகைக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவர், வி.சி.க.,யை சார்ந்தவரோ, தலைவரோ இல்லை. அவர் கட்சி குறித்து வேண்டுமானால் பேசட்டும். அவர், இன்று ஒரு கட்சியில் இருப்பார்; நாளை மற்றொரு கட்சிக்கு சென்று விடுவார். எங்கள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறோம். பா.ஜ., - பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை