60% வன்னியர்கள்... பழனிசாமிக்கு அன்புமணி வைக்கும் வேட்டு admk vs pmk | pmk crisis | tn election 2026
கடந்த தேர்தலில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அதிமுக கணிசமான தொகுதிகளை வென்றதற்கு பாமக முக்கிய காரணம். எனவே இந்த முறையும் எப்படியாவது பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பது அதிமுகவின் விருப்பம். அதே போல் அதிமுக, பாஜ கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பது தான் பாமக தலைவர் அன்புமணியின் ஆசை. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையின் போது, ஆட்சியில் பங்கு தர வேண்டும்; நான்கு அமைச்சர் பதவிகள் தர வேண்டும்; ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 35 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் அன்புமணி தரப்பு பேசி முடித்து இருக்கிறது. ஆனால் இதற்கு பழனிசாமி தரப்பு எந்த முடிவும் சொல்லவில்லை. ராமதாஸ்-அன்புமணி மோதல் முடிந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்று பழனிசாமி நினைக்கிறார். அன்புமணியின் கூட்டணி ஆட்சிக்கான உடன்பாட்டை பழனிசாமி ஏற்கவில்லை என்றால், தனித்து போட்டியிடுவது குறித்து, அன்புமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துள்ளார். வட மாவட்டங்களில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள தொகுதிகளில், ஓட்டை பிரித்து எளிதாக வெற்றி பெற முடியும் என்றும் அன்புமணி கருதுகிறார். மேலும் சேலம் மாவட்டம் பென்னாகரம் தொகுதியில், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அன்புமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் நிலைமை ஏற்பட்டால், பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் களம் இறங்குவது என்று முடிவு செய்து இருக்கிறாராம். அங்கு 60 சதவீதம் வன்னியர்கள் உள்ளனர். நேரடியாக அன்புமணி களம் இறங்கினால், அவர்களின் ஓட்டை எளிதில் பெற்று வெல்ல முடியும். பேச்சை கேட்காத பழனிசாமியை தோற்கடிக்கவும் முடியும். இப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து விடலாம் என்று கணக்குப்போட்டு காத்திருக்கிறாராம் அன்புமணி.