மோடி செய்ததை சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி admk bjp alliance nda ammk ttv dhinakaran
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதி செய்த பிறகு, 2026 ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான்தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி இல்லை என சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்கு பதிலடியாக நாங்களும் ஏமாந்து போக மாட்டோம் என அண்ணாமலை கூறினார். இதனால் அதிமுக பாஜ கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சியில் பேட்டியளித்த டிடிவி தினகரன் தன் பங்குக்கு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யுமிடங்களில் அமமுக பெயரை சொல்வதில்லையே? என கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என தினகரன் பதிலளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவைதான் அமையும் எனவும் கூறிய அவர், 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் மத்தியில் பாஜவுக்கு மெஜாரிட்டி கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மோடி பங்கு கொடுத்தார். அதுபோலத்தான் தமிழகத்திலும் நடக்கும் என கூறினார். முதல்வர் யார் என்று கேட்டால் அதை நீங்கள் அமித் ஷாவிடம் கேளுங்கள் எனவும் தினகரன் சொன்னார். அதிமுக பாஜ கூட்டணி பற்றி தொடர்ந்து, கேள்வி கேட்ட நிருபர்களை பார்த்து இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருள் பற்றியோ பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது பற்றியோ கேள்வி கேட்கிறீர்களா? என திரும்ப கேட்டு வாயடைக்க வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே பிரதான கட்சியான அதிமுகவை சீண்டும் விதமாக டிடிவி தினகரன் பேட்டி கொடுத்திருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இது, கூட்டணிக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.