கல்வி அமைச்சர் மீது அண்ணாமலை பாய்ச்சல் | Annamalai | Pudukottai arimalam school case | BJP vs DMK
7 மாணவிக்கு AHM பாலியல் தொல்லை வெளிச்சத்துக்கு வந்தது இப்படி தான்! அண்ணாமலை முக்கிய தகவல் தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அடுத்தடுத்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு மாணவிக்கு 58 வயதான உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையில் மேலும் 6 குழந்தைகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 7 மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது அவரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் கல்வி அமைச்சர் மேகஷ் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை கூறி உள்ளார். அவரது அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் ஆலோசனை குழுக்கள் அமைப்பதாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எந்த பள்ளியிலும் இந்த குழு இல்லை என்பதை தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் காட்டுகின்றன. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் நம் பிள்ளைகளை பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலும் தோற்றுவிட்டது. இனியும் கல்வி அமைச்சர் மகேஷ் அமைச்சராக தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. உடனடியாக பதவி விலக வேண்டும். திறமையான மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.