திமுக வாக்குறுதியை நம்பி பிரச்னைகளை சந்திக்கும் மாணவர்கள் | Annamalai | State president | BJP
ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது திமுகவின் வழக்கம் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2021 டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை 16,302 கோடி ரூபாய் என்ற நிலையில், வெறும் 48.95 கோடி ரூபாயை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? 2021 திமுக தேர்தல் வாக்குறுதியில், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பி செலுத்தும் என்று கூறி 4 ஆண்டுகள் ஆகின்றன. திமுகவின் வாக்குறுதியை நம்பி, கல்வி கடனை திரும்ப செலுத்தாமல் 2023ல், வாரா கடனாக 4,124 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளை சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கி கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். இப்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அரசு. நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாக தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான் இதற்கு காரணம். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா? தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழக மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விக் கடனையும் உடனடியாக ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதி பாகுபாடை தூண்ட வேண்டாம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.