உள்நாட்டில் தயாரித்து உலகுக்கு தரும் முயற்சியால் ஏற்றுமதி அதிகரிப்பு! | Bharat mobility global expo
டில்லியில் வரும் 22ம் தேதி வரை நடக்கும் இந்திய வாகன துறை கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த சில தினங்களுக்கு இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் வருவர். புதிய வாகனங்களையும் இங்கே அறிமுகப்படுத்துவர். இந்தியாவில் போக்குவரத்துக்கு உள்ள எதிர்காலம் பற்றி இந்த கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் எதிர்காலத்துக்கு தயாராக உள்ளது. ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி வாகன துறையில் கோலோச்சிய செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தனர். இந்திய நடுத்தர குடும்பங்களின் கனவுகளை நனவாக்கவும், இந்திய ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சிக்கும் இந்த இரண்டு பேரும் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். அவர்களின் பாரம்பரியம் நாட்டின் முழு போக்குவரத்து துறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும். இன்றைய பாரதம் ஆர்வம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல்களால் நிறைந்து காணப்படுகிறது. அது இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் தெளிவாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்டோ மொபைல் துறை ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவில் தயாரித்து உலகுக்கு அளிப்போம் என்ற கோஷத்தை பின்பற்றி ஏற்றுமதிகளும் அதிகரிக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 25 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகின்றன. ஆட்டோமொபைல் துறையின் தேவை எப்படி சீராக அதிகரித்து வருகிறது என்பதை இது எடுத்துச் சொல்கிறது. இதனால்தான் இந்த துறையில், இந்தியா உயர்ந்த நம்பிக்கைகளுடன் பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும். சூழலையும் கெடுக்க கூடாது. இந்த இரண்டையும் ஆதரிக்க கூடிய ஒரு வாகன முறை அமைப்பில் இந்தியா வேலை செய்து வருகிறது. எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்கும் அமைப்பாக அது இருக்கும். அதனால்தான் பசுமை தொழில் நுட்பம், மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆட்டோ மொபைல் துறையில் மேக் இன் இந்தியா முயற்சி ஒரு மிகப் பெரிய பங்களிப்பை செய்கிறது. மேக் இன் இந்தியா முயற்சி அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (PLI - Production Linked Incentive)Scheme) திட்டத்தால் ஊக்கம் பெற்று இருக்கிறது. இந்த திட்டம் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாகன விற்பனைக்கு பங்களிப்பு செய்திருக்கிறது. அத்துடன் ஆட்டோமொபைல் துறையில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளை நேரடியாக உருவாக்கி இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.