திமுக அரசின் அராஜகத்துக்கு விரைவில்முடிவு; நாகேந்திரன் | BJP | Stalin | nainarnagenthiran
அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தை பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தூய்மை பணியாளர்கள் சமீபத்தில் சென்னையில் போராட்டம் நடத்தினர். 14 நாட்கள் போராடியவர்களை மனித தன்மையின்றி தாக்கி, தடாலடியாக அப்புறப்படுத்தியது திமுக அரசு. ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கு துணை நின்றவர்களையும் ஏவல்துறை அடித்து துன்புறுத்தியதை தமிழகம் மறக்கவில்லை. இருப்பினும், போராட்டத்தை மீண்டும் அறவழியில் தொடர்வது குறித்து ஆலோசிக்க, சென்னை சிந்தாதிரிப்பேட்டை உழைப்பாளர் தின பூங்காவில் தூய்மை பணியாளர்கள் கூடினர். அவர்கள் மீது திமுக அரசு மீண்டும் அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது. ஆளும் அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தங்களுக்கு எதிராக எழும் போராட்ட குரல்களை கண்டு திமுக அரசுக்கு அத்தனை பயமிருந்தால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது தானே? அதைவிட்டு விட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுதான் திமுகவின் சமூகநீதியின் லட்சணமா? ஆளும் அரசு தனது அராஜக போக்கால் அழிவை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது! அனைத்திற்கும் கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என்று நாகேந்திரன் கூறியுள்ளார். #cmstalin #nainar nagenthiran #BJP #dmk #chennai #sanitationworkers