திமுக அரசு தோற்றது: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும் | CM stalin | school girl | Sexually Assault
போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 13 வயது மாணவி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறியுள்ளனர். இதுதொடர்பாக, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர்களே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ளனர். இது, 2023 ஆம் ஆண்டை விட, சுமார் 35% அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம், குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாகச் செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை. பெண் குழந்தைகள் நலனுக்காகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், இவை எதையும், தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாக தெரியவில்லை. ஒரு புறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம், மற்றொரு புறம், அவற்றை கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என, நமது குழந்தைகளுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்திருக்கிறது. இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, எடப்பாடி பழனிசாமி பீதியை கிளப்புகிறார் என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன சொல்ல போகிறார்கள்? அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல். ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடூரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். கொஞ்சமேனும் மனசாட்சி இருந்தால், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என பகிரங்கமாக அறிவித்து மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி கூறியுள்ளார்.