உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 27,000 பூத் ஏஜெண்டுகள் போலியா? அஞ்சும் காங்.,மேலிட பொறுப்பாளர்கள் | Congress | DMK | 2026 Election

27,000 பூத் ஏஜெண்டுகள் போலியா? அஞ்சும் காங்.,மேலிட பொறுப்பாளர்கள் | Congress | DMK | 2026 Election

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், சிறப்பாக செயல்படுவோரை மட்டுமே மாவட்ட தலைவர்களாக நியமிக்கவும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம், நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அத்திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சரிவர பணி செய்யாத மாவட்ட தலைவர்களை மாற்றிவிட்டு, புதிய தலைவர்களை தேர்வு செய்துள்ளனர். அந்த பட்டியல், டில்லி மேலிடத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையே, எந்தெந்த அரசியல் கட்சிகள், எவ்வளவு ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்துள்ளது என்ற விபரங்களை, கடந்த சில நாட்களாக தேர்தல் கமிஷன் வெளியிட்டு வருகிறது. கடந்த 21ம் தேதி வெளியிட்ட பட்டியலில், பாஜ- தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,000 ஓட்டுச்சாவடிகளில் 27,000 முகவர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிதேவதித் ஆல்வா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி கேட்கும் நிலையில், ஓட்டுச்சாவடி முகவர்களைக்கூட சரவர நியமிக்கவில்லை என்ற குறைபாடு இருக்கக்கூடாது என அவர்கள் கருதினர். அதனால், கடந்த ஒரு வாரமாக, காலை, மாலை, இரவு என தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் ஜூம் மீட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஜூம் எனும் செயலியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரசின் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்பதில்லை; திட்டமிட்டே சிலர் புறக்கணித்து வருகின்றனர். பங்கேற்கும் சில மாவட்ட தலைவர்களும், கம்ப்யூட்டரை இயக்கி, மீட்டிங் துவங்கியதும் தலையை காட்டிவிட்டு மறைந்து விடுகின்றனர். மீட்டிங்கில் ஏன் தொடர்ந்து பங்கேற்பதில்லை என கேட்டால், கூட்டத்தில் பூத் ஏஜன்ட்களை நியமிக்க சொல்லித்தான் வலியுறுத்துகின்றனர். எங்கள் பதவி காலமே விரைவில் முடிவடைய உள்ளது. அப்படி இருக்கும்போது, நாங்கள் ஏன் கட்சிக்காக கைக்காசை செலவழிக்க வேண்டும்? கைக்காசை செலவிட்டு பூத் ஏஜன்ட்களை நியமிப்பதால், எங்களுக்கு என்ன பிரயோஜனம் என கேட்கின்றனர். இதுவரை ஓட்டுச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்ட 27,000 பேர் கூட போலியாக இருக்கலாம் என மேலிட பொறுப்பாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த லட்சணத்தில் கட்சி இருக்கும்போது, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக எப்படி ஏற்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், கூட்டணி விஷயத்தில் தமிழக காங்கிரசுக்குள் குழப்பமான நிலையே நீடிக்கிறது என தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ